ஏஞ்சல் பெர்முடெஸ்
பதவி,பிபிசி நியூஸ் வேர்ல்டு
4 மார்ச் 2024
திட்டமிட்டபடி அனைத்து விஷயங்களும் நடந்திருந்தால், மேயர் ஆம்ஷெல் ஒரு ரப்பியாக (யூத மதகுரு) இருந்திருப்பார். ஆனால் விதி அவரது திட்டங்களை மாற்றியது. ஒரு ஜெப ஆலயத்தை நடத்துவதற்கு பதிலாக, உலகின் மிகவும் பிரபலமான ரோத்ஸ்சைல்ட் & கோ எனும் தனியார் வங்கி சாம்ராஜ்யத்தை அவர் நிறுவினார்.
ஃபிராங்க்ஃபர்ட் நகரின் யூத கெட்டோவான ஜூடென்காஸ்ஸில் மேயர் ஆம்ஷெலின் மூதாதையர் ஒருவரின் வீட்டை வேறுபடுத்திக் காட்டிய சிவப்பு நிற அடையாளத்திலிருந்து (ரோத் (Rot) = சிவப்பு, சைல்ட் (schild) = அடையாளம்) உருவான ரோத்ஸ்சைல்ட் என்ற குடும்பப் பெயர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கிறது.
ஃபோர்ப்ஸ் இதழின் பில்லியனர்கள் பட்டியலில் இந்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் தற்போது இடம்பெறவில்லை என்றாலும், சர்வதேச அரசியல் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஒரு அழியாத தடத்தைப் பதித்துள்ளது இந்த குடும்பம்.
குறிப்பாக 19ஆம் நூற்றாண்டில், நெப்போலியனுக்கு எதிராகப் போரிடும் ஐரோப்பியப் படைகளுக்கு இந்த குடும்பத்தினர் நிதியுதவி அளித்தனர். அதே போல, பிரதம மந்திரி பெஞ்சமின் டிஸ்ரேலி தலைமையிலான பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சூயஸ் கால்வாயில் மில்லியன் டாலர் பங்குகளை வாங்குவதற்கும் நிதியளித்தனர்.
சமூகத்தில் அவர்களது புகழ் வளர்ந்த அதே நேரத்தில், ரோத்ஸ்சைல்ட்ஸ் குறித்த எண்ணற்ற சதி கோட்பாடுகளும் வளர்ந்தன. அவை மீண்டும் மீண்டும் பொய் என்று நிரூபிக்கப்பட்டாலும், இந்த இரண்டு நூற்றாண்டுகளாக அத்தகைய சதி கோட்பாடுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.
கடந்த மாத இறுதியில், இந்த குடும்பத்தின் பிரிட்டிஷ் கிளையின் தலைவராகக் கருதப்பட்ட லார்ட் ஜேக்கப் ரோத்ஸ்சைல்ட் தனது 87வது வயதில் இறந்த செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல கட்டுக்கதைகள், சதி கோட்பாடுகள் மீண்டும் உலாவந்தன.
இந்த குடும்பத்தின் வரலாறு என்ன, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்த அவர்கள் உண்மையில் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள்?
