கடந்த ஏழு நாட்களுக்குள் இரண்டாவது முறையாக தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோதி, அரசியல் கூட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறார். ஆளும் தி.மு.கவைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். ஆனால், இந்தக் கூட்டங்களில் கவனிக்க வேண்டிய வேறு சில அம்சங்களும் இருக்கின்றன.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனுடன் உரையாடினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து:
கடந்த சில நாட்களுக்குள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு பயணம் செய்துவிட்டார். தேர்தலே அறிவிக்காத நிலையிலும் அரசியல் கூட்டங்களிலும் பங்கேற்றுப் பேசியிருக்கிறார். என்ன காரணம்?
இன்னும் பத்து நாட்களில் பல மாநிலங்களுக்குப் பயணம் செய்து, பல திட்டங்களைத் துவக்கி வைக்கவிருக்கிறார். அவரது பயணத் திட்டத்தின் அடிப்படையில்தான் தேர்தலே அறிவிக்கப்படப் போகிறது. 7 நாட்களுக்குள் தமிழ்நாட்டிற்கு இரண்டாவது முறையாக வந்திருக்கிறார். காலை தெலங்கானா வந்துவிட்டு, மதியம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். மீண்டும் தெலங்கானா சென்று இரவு தங்குகிறார். பா.ஜ.க. 370 – 400 தொகுதிகளைப் பெற வேண்டும் என நினைக்கிறார்கள். அந்த அளவு தொகுதிகளைப் பெறுவோமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. இதன் காரணமாக எல்லா மாநிலங்களுக்கும் தொடர்ந்து பயணம் செய்கிறார்.