செவ்வாய் கோளைப் போலவே பூமியில் காணப்படும் இந்த நகரும் ராட்சத குன்று எங்கே உள்ளது தெரியுமா?

ஜார்ஜினா ரன்னார்ட்
பதவி,அறிவியல் செய்தியாளர்
4 மார்ச் 2024
பூமியின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான மணல் திட்டுகளில் ஒன்றின் வயது முதன்முறையாக கணக்கிடப்பட்டுள்ளது.

நட்சத்திர குன்றுகள் அல்லது பிரமிட்(Pyramid) குன்றுகள் என அவற்றின் தனித்துவமான வடிவங்களுக்கு ஏற்ற வகையில் பெயரிடப்பட்டுள்ள இவை, பல நூறு மீட்டர் உயரம் கொண்டவையாக இருக்கின்றன.

இவை, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் வட அமெரிக்காவிலும், செவ்வாய் கிரகத்திலும் காணப்படுகின்றன. ஆனால், இதுநாள் வரையிலும், அவை உருவான தேதியை எந்த நிபுணர்களும் இதற்கு முன் குறிப்பிடவில்லை, அவர்களால், குறிப்பிடவும் முடியவில்லை.

தற்போது, மொரோக்கோவில் உள்ள இந்த வகையான லாலா லல்லியா என்ற குன்று 13,000 ஆண்டுகளுக்கு முன் உருவானது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மணல் மேடுகள்பட மூலாதாரம்,C BRISTOW
படக்குறிப்பு,
மொரோக்கோவில் என்ற மணல் குன்று 13,000 ஆண்டுகளுக்கு முன் உருவானது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

எதிரெதிர் காற்றினால், திசை மாற்றும் ஏற்படுவதில் தான் இதுபோன்ற நட்சத்திர குன்றுகள் உருவாகின்றன. இந்த குன்றுகளின் வயதை புரிந்துகொண்டு, தெரிந்து கொள்வதன் மூலம் அந்தக் காலத்தில் இருந்த காற்றையும், அந்தக் கால காலநிலையையும் அறிவதற்கு உதவுதாகக் கூறினார் அபெரிஸ்ட்வித் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜியோஃப் டுல்லர். இவர், இந்த குன்றுகள் தொடர்பாக ஆராய்ச்சி முடிவுகளை பேராசிரியர் சார்லஸ் பிரிஸ்டோவுடன் இணைந்து வெளியிட்டார்.

லாலா லால்லியா என்ற குன்று ஒரு பழங்குடியான அமாஸிகின் பெயர். அதன் பொருள் மிக உயர்ந்த புனிதமான இடம் என்பதாகும். இந்த குன்று தென்கிழக்கு மொரோக்கோவில் உள்ள எர்க் செப்பி மணல் கடலில் அமைந்துள்ளது. இது 100 மீட்டர் உயரமும், 700 மீட்டர் அகலமும் கொண்டது.

உருவான ஆரம்ப காலத்திற்கு பிறகு, சுமார் 8000 ஆண்டுகளாக அது வளரவில்லை. மாறாக, அது கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக விரைவாக விரிவடைந்து வருகிறது.

பூமியின் புவியியல் வரலாற்றில், பொதுவாக பாலைவனங்களை பார்க்க முடியும். ஆனால், நட்சத்திரக் குன்றுகளை அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது.

பேராசிரியர் ஜியோஃப் டுல்லர் இதுகுறித்து கூறுகையில், “அவை மிகவும் பெரியதாக இருப்பதால், நிபுணர்கள் ஒரு தனித்துவமான குன்றுகளைத்தான் தாங்கள் பார்க்கிறோம் என்பதையே அவர்கள் உணரவில்லை.”என்றார்.

“இந்த கண்டுபிடிப்புகள் பலரை ஆச்சரியப்படுத்தும், ஏனெனில் இந்தக் குன்று எவ்வளவு விரைவாக உருவானது என்பதையும், அது ஓராண்டுக்கு சுமார் 50 செமீ வேகத்தில் பாலைவனத்தின் குறுக்கே நகர்கிறது என்பதையும் பார்க்கலாம்,” என்றார் அவர்.

விஞ்ஞானிகள் லுமினென்சென்ஸ் டேட்டிங் (luminescence dating)என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி நட்சத்திரக் குன்றுகளின் வயதைக் கண்டறிந்தனர்.

Exit mobile version