புதிய மின் இணைப்புக்கான கட்டணத்தை தவணை அடிப்படையில் செலுத்த வாய்ப்பளிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர

புதிதாக மின் இணைப்பை பெற்றுக்கொள்ளும் சேவை கட்டணத்தில் 25 சதவீதத்தை முதல் கட்டமாகவும்,மிகுதி கட்டணத்தை தவணை அடிப்படையிலும் செலுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மீள இணைக்கும் போது அறவிடப்படும் மேலதிக கட்டணம் 800 ரூபாவாக நிர்ணயிக்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (07) இடம்பெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது பாராளுமன்ற உறுப்பினர் எச்.தர்மசேன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மின் துண்டிக்கப்பட்டு மீள் இணைப்பு வழங்கும் போது பெற்றுக்கொள்ளப்படும் கட்டணங்கள் மின்சாரத்துறை சேவை நிர்வாக கட்டமைப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்கமைய 2019 ஆம் ஆண்டு மின்சார மீள் இணைப்புகள் ஊடாக சுமார் 78 இலட்சம் ரூபா வருமானமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நீர்வலுத்துறை ஊடாக அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. உமா ஓயா செயற்திட்டத்தின் ஊடாக 120 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

முழுமையான தரப்படுத்தலுக்கு அமைய கடந்த 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் நிலக்கரி ஊடான மின்னுற்பத்தியை மட்டுப்படுத்தி காற்றாலை, சூரிய மின் கலம் மற்றும் நீர்வலுத்துறை ஊடாக அதிகளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்துக் கொள்ள விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது எழுந்து மேலதிக கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் எச்.தர்மசேன,பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 400,500,600 ரூபா மின்கட்டணத்தை செலுத்த முடியாதவர்களின் மின்கட்டணம் துண்டிக்கப்படுகிறது. மீண்டும் அவர்களுக்கு மின் இணைப்பை வழங்கும் போது 3,000 ரூபா மேலதிக கட்டணம் அறவிடப்படுகிறது. 400 ரூபாவை கூட செலுத்த முடியாதவர்களிடமிருந்து 3,000 ரூபாவை மேலதிகமாக கோருவது நியாயமற்றது.ஆகவே இந்த 3,000 ரூபா கட்டணத்தை 500 ரூபாவாக குறைக்க வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து உரையாற்றிய மின்சாரத்துறை அமைச்சர் ,1,000 ரூபாவுக்கு குறைந்த மின்கட்டணம் உள்ளவர்களின் மின் இணைப்பை துண்டிக்கும் போது காலவகாசம் வழங்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளோம்.

நிலுவை இல்லாமல் உரிய நேரத்தில் மின்கட்டணத்தை செலுத்துபவர்கள் மின்கட்டணம் செலுத்துபவர்கள் ஏதாவதொரு நிலையில் மின்கட்டணத்தை செலுத்துவதை தாமதித்தால் அவர்களுக்கு சலுகை வழங்கப்படும்.

மின்கட்டணத்தை செலுத்தாதவர்களின் மின்கட்டணம் துண்டிக்கப்பட்டு அவர்களுக்கு மீள மின் இணைப்பு வழங்கும் போது அறவிடப்படும் 3,000 ரூபா கட்டணம் கடந்த ஆண்டு 1,300 ரூபாவாக குறைக்கப்பட்டது.இந்த தொகையை 800 ரூபா நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன் புதிதாக மின் இணைப்பை பெற்றுக்கொள்பவர்கள் முழுமையாக கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை. 25 சதவீத கட்டணத்தை ஆரம்பத்தில் செலுத்தி விட்டு மிகுதியை தவணை அடிப்படையில் செலுத்தலாம். இதற்கான உத்தியோகபூர்வ அனுமதி வெகுவிரைவில் வழங்கப்படும் என்றார்.

Exit mobile version