நாட்டில் அனைத்து வகையான உயிர்காக்கும் மருந்துகளும் கிடைக்கின்றன -சுகாதார அமைச்சர்

14 வகையான உயிர்காக்கும் மருந்துகளும் தற்போது நாட்டில் உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர், சில வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் அமைச்சிடம் உள்ளது என்றார்.

பெரும்பாலான அத்தியாவசிய மருந்துகளும் கையிருப்பில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 384 அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் சுமார் 153 அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார்.

இவ்வாறான மருந்துகளை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

இதேவேளை, அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்னரே, வெளிப்படையான கொள்முதல் செயல்முறையின் மூலம் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் மருந்துகளை இறக்குமதி செய்வது நிறைவடையும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனி, பருப்பு அல்லது அரிசி போன்று மருந்துகளை கொள்வனவு செய்ய முடியாது என்றும், தரப்படுத்தப்பட்ட செயல்முறை நடைமுறையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மருந்துகளை முன்பதிவு செய்வதோடு, மருந்து உற்பத்தி தொடர்பான நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும், சில சந்தர்ப்பங்களில் நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை தேவைப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மருந்து உற்பத்திக்குப் பின்னர் , ஏனைய தயாரிப்புகளைப் போல அவற்றை வைத்திருக்க முடியாது.

அண்மைக் காலங்களில் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் மருந்துகளை இறக்குமதி செய்யும் செயற்பாடுகள் தொடர்பில் சில ஊடகங்கள் தீங்கிழைக்கும் வகையில் செயற்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர், குறிப்பாக அமைச்சரவைப் பத்திரம் தொடர்பான உண்மைகள் உண்மையற்றவை எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியும் அமைச்சரவையும் புறக்கணிக்கப்பட்டதாக ஊடகங்கள் கூறுவதாகவும், செயல்முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

திவாலான நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர், இலங்கைக்கு அவசர தேவைகளுக்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியதாகவும் அதில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏப்ரல் மாதம் சுகாதாரத் துறைக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் , ஆசிய அபிவிருத்தி வங்கி 67 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் , சீனா 28 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version