கோல்ஃபேஸ் இசை நிகழ்ச்சி மேடையில் குழப்பம் விளைவித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணிநிறுத்தம்

காலிமுகத்திடலில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் மேடையில் இசைக்குழுவைத் தடுக்கும் வகையில் நடனமாடி குழப்பம் விளைவித்த பொலிஸ் கான்ஸ்டபிளை பணி இடைநிறுத்தம் செய்ய பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.பொரலந்த பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் கடமையாற்றும் இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பில் நத்தார் புத்தாண்டு கொண்டாட்டங்களின் பாதுகாப்பிற்காக விசேட கடமைக்காக அழைக்கப்பட்ட உத்தியோகத்தராவார்.
கடந்த 27ஆம் திகதி பகல் வேளையில் பணிபுரிந்த பின்னர் இந்த அதிகாரி இரவு சிவில் உடையில் காலிமுகத்திடலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிடச் சென்றுள்ளார்.
அப்போது இந்த அதிகாரி மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேடையின் முன் நடனமாடி மகிழ்ந்த அவர், திடீரென இசைக் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்த மேடைக்கு சென்றதாக பொலிஸார் கூறுகின்றனர். அப்போது அந்த இடத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள், அந்த அதிகாரியை வளாகத்தில் இருந்து வெளியேற்ற கடுமையாக முயற்சித்தனர்.கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அங்கு அவர் ரூ. 50,000 பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் அடுத்த வருடம் ஜனவரி 13 ஆம் திகதி இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
Exit mobile version