ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசில் வடக்கு கிழக்கு தமிழரது பெரும்பாலான பிரச்சினைகளுக்கு சுமுகமாக தீர்வுகாணப்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட அதிகாரி தெரிவிப்பு
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்புடன் தீர்வு வழங்கப்பட்டதும் உடனடியாகவே மலையக மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளின் கீழ் தற்போது பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து கட்சிகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட சர்வகட்சி மாநாட்டின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துக்களுக்கிணங்க தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக தலையிட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் தீர்வு காண வேண்டிய பிரச்சினைகளில் பெரும்பாலானவை தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனையடுத்து, மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை ஜனாதிபதி உடனடியாக ஆரம்பிப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதும் அதனையடுத்து முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் போது அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்துடன் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடனேயே அதை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
