உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.
கீவ், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் இன்னும் சில வாரங்களில் ஓர் ஆண்டை நெருங்கவுள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்து போயின.
இதேவேளையில் இந்த போரில் ரஷியாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. போரில் ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் போரில் இருந்து பின்வாங்காத ரஷியா தொடர்ந்து வீரர்களை அணிதிரட்டி போர் முனைக்கு அனுப்பிவருகிறது.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, தனது அமைச்சு அதிகாரிகளுடன் இன்று ஹெலிகாப்டரில் சென்றார்.
தலைநகர் கீவ் நகருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ப்ரோவெரி என்ற பகுதி அருகே வந்த போது, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மழலையர் பாடசாலை அருகே நிலைத் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில், உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, உள்துறை இணை அமைச்சர், அமைச்சு அதிகாரிகள், பாடசாலைக் குழந்தைகள் 3 பேர் என மொத்தம் 18 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
