ஹோட்டல் மேல் மாடியிலிருந்து வீழ்ந்த 26 வயது இளைஞன் பலி

கெஸ்பேவயிலுள்ள மூன்று மாடி ஹோட்டலின் மேல் மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்ததாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விளைஞர், இரண்டரை வருடங்களாக இங்கு, காசாளராகக் கடமைபுரிந்துள்ளார்.

தெனிப்பிட்டிய, வரகாபிட்டிய, பிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 26 வயது ரித்மா தரங்க என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரவு 11 மணியளவில் ஹோட்டல் மூடப்பட்டதையடுத்து மறுநாள் அதிகாலை 02 மணியளவில் ஹோட்டலுக்கு முன், இரத்தம் தோய்ந்த நிலையில் இவர், உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை  பணியாளர் ஒருவர் பார்த்துள்ளார். உடனடியாக ஹோட்டல் உரிமையாளருக்கு அறிவித்ததையடுத்து, சில நிமிடங்களில் அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அரை மணி நேரத்தின் பின்னர் இளைஞன் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர், நேற்று முன்தினம் வெகுநேரம் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இவருடைய மரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version