மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா வந்துள்ள எகிப்திய ஜனாதிபதி அப்துல் ஃபாதா எல்சிசி இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்டதோடு, விவசாயம், மின்வெளி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆறு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்டன.
கடந்த 25ம் திகதி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசிய எகிப்திய அதிபருக்கு இராப்போசன விருந்து அளிக்கப்பட்டது. பின்னர் இந்தியப் பிரதமரை சந்தித்த எகிப்திய அதிபர் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியதோடு தூதுக்குழு மட்ட பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. இந்திய விஜயத்தை மேற்கொண்டிருந்த எகிப்திய ஜனாதிபதியுடன் ஐந்து அமைச்சர்களும் பல்வேறு துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் கொண்ட உயர் மட்டக் குழுவும் வருகை தந்திருந்தது. இரு தரப்பினரும் பாதுகாப்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பான விவகாரங்களையும் வர்த்தக அபிவிருத்தி பற்றியும் விரிவாக ஆராய்ந்தனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அரபு மற்றும் ஆபிரிக்க நாட்டு அரசியலில் முக்கிய பங்காளியாகக் கருதப்படும் எகிப்துடன் தமது உறவை மேலும் பலப்படுத்தி விரிவுபடுத்த இந்தியா விரும்புகிறது. ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க சந்தை வாய்ப்புகளுக்கான தலைவாசலாக எகிப்தை இந்தியா கருதுகிறது. பன்னாட்டு மற்றும் சர்வதேச அரங்குகளில் இணைந்து பணியாற்ற முடியும் என இவ்விரு நாடுகளும் கருதுகின்றன.
