09ஆவது பாராளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் நாளை

epa04907823 Sri Lanka?s 8th Parliament in its maiden session at Sri Jayewardenepura Kotte in Colombo, Sri Lanka, 01 September 2015. The maiden session of Parliament began following the General Elections held on 17 August where the United National Party won a majority number of seats, though not an absolute majority. The party is to form a National Government with the main opposition Sri Lanka Freedom Party of which President Maithripala Sirisena is the chairman. EPA/M.A.PUSHPA KUMARA

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை 08ஆம் திகதி வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றதுடன், கோட்டே ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவியர் உள்ளிட்ட பலர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர்.

அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை காலை 10.00 மணிக்கு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.

நாளைய தினம் மு.ப. 09.15 மணிக்குள் விசேட விருந்தினர்களுக்கு தங்கள் இருக்கைகளில் அமருமாறு கோரப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் அவருடைய பாரியாரின் வருகையைத் தொடர்ந்து, பிரதமர் தினேஷ் குணவர்தனவின் வருகையும், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முதற்பெண்மணியின் வருகையும் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வரவேற்பார்கள்.

படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி பாராளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்.

பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே கோட்டே ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவியர் ஜயமங்கல கீதம் இசைக்கவுள்ளனர்.

இதன் பின்னர் உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள ஜனாதிபதி மு.ப 9.55 மணிவரை அங்கிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து பாரம்பரியத்துக்கு அமையப் பிரதிப் படைக்கல சேவிதர், செங்கோலைக் கையில் தாங்கியவாறு படைக்கல சேவிதர், ஜனாதிபதி, சபாநாயகர், செயலாளர் குழு மற்றும் உதவிப் படைக்கல சேவிதர் என்ற வரிசைப்படி அணிவகுத்து சபா மண்டபத்துக்குள் செல்வர்.

சபைக்குள் நுழையும்போது உதவி படைக்கல சேவிதர் ‘கௌரவ ஜனாதிபதி’ எனத் தெரிவித்ததும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நிற்பது பாரம்பரியமாக இடம்பெறும். சபா மண்டபத்துக்கு அழைத்துவரப்படும் ஜனாதிபதி அங்கிராசனத்தில் அமர்ந்து சபைக்குத் தலைமை தாங்குவார்.

Exit mobile version