சட்ட மா அதிபரின் பரிந்துரையை கேட்டது அரசு !
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை நீடிக்க முடியுமா என்பது தொடர்பான ஆலோசனையை அரசாங்கம் நேற்று சட்ட மா அதிபரிடம் கேட்டிருப்பதாக தெரியவருகிறது.
அதன் பரிந்துரை விரைவில் கிடைக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கூறினார்.
340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக்காலம் நேற்றுமுன்தினம் (19) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.
29 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 275 பிரதேச சபைகளுக்கான பதவிக்காலமே இவ்வாறு நிறைவடைந்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 341 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்ற நிலையில், காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பிரதேச சபை, காலம் தாமதித்து ஸ்தாபிக்கப்பட்டமையால் அதன் பதவிக்காலம் நிறைவடையவில்லை.
இதனிடையே, பதவிக்காலம் நிறைவடைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக செயற்பாடுகள் மாகாண ஆணையாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
