மனித நாகரிகத்தின் முந்தைய வரலாறுகளை மாற்றி எழுதும் வகையில் அமைந்திருக்கிறது, 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் உருவானதாகக் கருதப்படும் பழமையான கட்டுமானம்.
25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கிளாஸ் ஸ்மிட் ஒரு துருக்கிய மலை உச்சியை ஆய்வு செய்தபோது அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கட்டடங்கள் மிகவும் அசாதாரணமானவை, தனித்துவம் மிக்கவை என நம்பினார்.
உர்பா நகருக்கு அருகிலுள்ள சுண்ணாம்பு பீடபூமியின் மேல் “கோபெக்லி டெபே” என்று துருக்கியில் அழைக்கப்படும் மலை உச்சியில் 20 க்கும் மேற்பட்ட வட்டக் கல் அடைப்புகளைக் கண்டுபிடித்தார். அவற்றில் மிகப்பெரியது 20 மீ விட்டம் கொண்டதாக இருந்தது. அதன் மையத்தில் 5.5 மீ உயரமுள்ள இரண்டு செதுக்கப்பட்ட தூண்கள் நின்று கொண்டிருந்தன. கோபெக்லி டெபே என்றால் பெருவயிறு மலை என்று துருக்கிய மொழியில் பொருள்.
செதுக்கப்பட்ட கல் தூண்கள் கைகள் கட்டப்பட்ட மனித உருவத்தைக் கொண்டிருந்தன. அவை 10 டன்வரை எடை கொண்டவை. அது விலங்குகள் பழக்கப்படுத்தப்படாத காலம். பாண்டங்கள் கண்டுபிடிக்கப்படாத, உலோகக் கருவிகள் இல்லாத காலம். அப்படியொரு காலத்தில் இத்தகைய பிரமாண்டமான கட்டுமானத்தை உருவாக்குவது மக்களுக்கு மிகப்பெரிய, தொழில்நுட்ப ரீதியில் சவாலாக இருந்திருக்க வேண்டும்.
இந்த கட்டமைப்புகள் 11,000 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டவை அவை தங்குவதற்காக அல்லாமல் பிற காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட மனிதகுலத்தின் பழமையான கட்டுமானமாகக் கருதப்படுகிறது.
ஒரு தசாப்த பணிகளுக்குப் பிறகு, ஷ்மிட் ஒரு முடிவுக்கு வந்தார். நான் 2007இல் உர்பாவின் பழைய நகரத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றபோது, ”மனிதர்கள் விவசாயம் செய்யத் தொடங்கியது, நிரந்தர குடியிருப்புகளில் வாழத் தொடங்கியது ஆகிவற்றுக்கான அடிப்படைகளை விளக்குவதன் மூலம் மனித நாகரிகத்தின் வரலாற்றை மீண்டும் எழுதுவதற்கு கோபெக்லி டெபே உதவும்” என்று என்னிடம் கூறினார்.
அந்த இடத்தில் கிடைத்த கல் கருவிகள் மற்றும் பிற சான்றுகள், வட்டக் கல் அடைப்புகள், வேட்டையாடுபவர்களால் கட்டப்பட்டவை என்பதை உணர்த்தின. அவர்கள் கடந்த பனி யுகத்திற்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த மனிதர்கள். கண்டுபிடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான விலங்கு எலும்புகள் காட்டு இனங்களுடையவை. பயிரிடப்பட்ட தானியங்கள் அல்லது பிற தாவரங்ககள் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
இந்த வேட்டைக்காரர்கள் சுமார் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வந்து கோபெக்லி டெபேவின் T-வடிவ தூண்களை கல் கருவிகளால் செதுக்கியிருக்கலாம் என்று ஸ்மிட் கருதினார். அதற்கு குன்றின் அடிவாரத்தில் உள்ள சுண்ணாம்புக் கல் பாறையை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
தூண்களை செதுக்குவதும் நகர்த்துவதும் மிகப்பெரிய பணியாக இருந்திருக்கும். தூண்கள் மலை அடிவாரத்தின் இயற்கை சுண்ணாம்பு அடுக்குகளிலிருந்து செதுக்கப்பட்டுள்ளன. சுண்ணாம்பு கல்லின் பளபளப்பு அந்த நேரத்தில் கிடைத்த மரக் கருவிகளைக் கொண்டு வேலை செய்யத் தக்க அளவில் மென்மையாக இருந்திருக்கிறது.
மேலும் மலையின் வடிவங்கள் 0.6 மீ மற்றும் 1.5 மீ தடிமன் கொண்ட கிடைமட்ட அடுக்குகளாக இருந்ததால், பக்கங்களில் இருந்து அதிகப்படியானவற்றை வெட்டியிருக்க வேண்டுமே தவிர, கீழே இருந்து வெட்டியிருக்க வாய்ப்பில்லை என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
