உக்ரைன், ரஷ்யா இடையே பரஸ்பர தாக்குதல் தீவிரம்

உக்ரைனில் உள்ள இரத்த மாற்று நிலையம், பல்கலைக்கழகம் மற்றும் விண்வெளி ஆய்வு நிலையம் ஒன்றின் மீது வான் தாக்குதல்கள் இடம்பெற்று அந்த கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதோடு பலர் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

கருங்கடலில் ரஷ்ய கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே கடந்த சனிக்கிழமை (05) இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட 40 நாடுகளின் மூத்த அதிகாரிகள் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர சவூதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே தாக்குதல்கள் உக்கிரம் அடைந்துள்ளன.

இந்த இரண்டு நாள் கூட்டத்தின் இறுதி பிரகடனம் ஒன்று வெளிடப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு நகரான குப்பியன்ஸில் இருக்கும் இரத்த மையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. மறுபுறம் ரஷ்ய கட்டுப்பாட்டு டொனட்ஸ்க் பிராந்தியத்தில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றின் மீது உக்ரைன் கொத்துக் குண்டு தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டுகிறது.

இந்நிலையில் இரத்த மையம் மீதான தாக்குதல் ஒரு போர் குற்றம் என குறிப்பிட்டிருக்கும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி இதில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் நிகழ்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார். எனினும் அது பற்றிய எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை.

முன்னதாக கருங்கடலில் சென்று கொண்டிருந்த தனது கப்பல் உக்ரைனின் தாக்குதலுக்கு உள்ளானதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 11 சிப்பந்திகள் இருந்த கப்பலின் இயந்திர அறை சேதமடைந்தது. எவரும் காயமடையவில்லை என்று ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.

Exit mobile version