புற்று நோயால் போராடிய ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்

புற்று நோயால் போராடி வந்த சிம்பாப்வே முன்னாள் அணித்தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் தனது 49ஆவது வயதில் நேற்று (03) காலமானார். அவரது மரணம் பற்றி மனைவி நடின் ஸ்ட்ரீக் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஹீத் ஸ்ட்ரீக் மரணித்ததாக தவறான செய்தி பரவிய நிலையில் அவருடன் விளையாடிய முன்னாள் வீரர் ஹென்ரி ஒலொங்கா அந்த செய்தியை சரிசெய்த நிலையிலேயே அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குடும்பத்தினர், அன்புக்குரியவர்கள் சூழ தனது விட்டில் அவர் மரணித்ததாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார். கடந்த மே மாதமே ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயால் பதிக்கப்பட்டதாக செய்தி வெளியானதோடு தென்னாபிரிக்காவின் முன்னணி புற்றுநோயியல் நிபுணர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

வேகப்பந்த வீச்சாளரான ஸ்ட்ரீக் டெஸ்ட் போட்டிகளில் 216 விக்கெட்டுகளை வீழ்த்தி சிம்பாப்வே அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவராக சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளிலும் அவர் 239 விக்கெட்டுகள் மற்றும் 2,943 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அவர் 1993 தொடக்கம் 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மொத்தம் 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். தொடர்ந்து அவர் தேசிய அணியின் பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார்.

எனினும் இந்திய பிரீமியர் லீக் உட்பட டி20 லீக்குகள் தொடர்பான இரகசிய தகவல்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் அவருக்கு 2021 ஆம் ஆண்டு ஐ.சி.சி எட்டு ஆண்டுகள் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version