இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்ச கொடுப்பனவாக 20 ஆயிரம் ரூபாவை வழங்குமாறு கோரி அந்த தொழிற்சங்கத்தினர், குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அத்துடன், பாதீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், இன்று முன்னெடுக்கப்படவுள்ள சுகயீன விடுமுறை போராட்டத்தில் நோயாளர் பராமரிப்பு சேவையாளர்கள், கல்விப் பணியாளர்கள் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் ஆகியோர் இணையமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நுவரெலியா மற்றும் கண்டியில் உள்ள அஞ்சல் நிலையங்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிராகவும், 20 ஆயிரம் ரூபாய் வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தும் அஞ்சல் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றது.
கடந்த 10ஆம் திகதி இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பமான நிலையில், இன்று மாலை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, நாடளாவிய ரீதியில் 7 இலட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் மற்றும் பொதிகள் அஞ்சல் நிலையங்களில் தேங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் மாத்திரம் 4 இலட்சம் கடிதங்கள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
