அறநெறி பாடசாலைகளுக்கான இறுதி பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சாத்திகளை, அந்தப் பரீட்சை இடம்பெறும் அதே தினத்தில் 2025 ஆம் ஆண்டு உயர் தர வகுப்புகளுக்கான மாணவர்களை தெரிவு செய்யும் நேர்முக பரீட்சைக்கு அழைப்பு விடுத்திருந்தால் , அந்த நேர்முக பரீட்சைகளுக்காக அவர்களுக்கு வேறு தினத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர சகல பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்திருக்கிறாா்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் அகத்தியா ஆகிய சமய பாடசாலைகளுக்கான இறுதி பரீட்சை நாளை (28) மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களில் நாடு தழுவிய ரீதியில் நடத்துவதற்கான செயற்பாடுகளை பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒருசில பாடசாலைகளில் 2025 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் வகுப்புகளுக்கான மாணவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, 2023.12.28 மற்றும் 29 ஆம் திகதிகளில் ஏதாவதொரு பாடசாலையில் 2025 ஆம் ஆண்டு உயர்தர வகுப்புகளுக்கான மாணவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சைகளை நடத்துவதற்கு, மேற்குறிப்பிட்ட பரீட்சைகளுக்கு தோற்ற இருப்பவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தால் அந்த மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் அவர்களுக்கான நேர்முக பரீட்சைக்கு வேறொரு தகுந்த தினத்தை ஒதுக்கி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.
