1576-ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில், மெக்கா மற்றும் மதீனா புனித நகரங்களுக்கு அரச பெண்களின் குழுவை வழிநடத்தி அழைத்துச் சென்றார் ஒரு முகலாய இளவரசி.
இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித யாத்திரைக்கு முகலாய இந்தியாவில் இருந்து ஒரு பெண் சென்றது அதுவே முதல் முறை.
அந்தப் பெண் முகலாய பேரரசை நிறுவிய பாபரின் மகள் குல்பதன் பேகம்.
அவர் தலைமையில், அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்கள், ஃபதேபூர் சிக்ரியில் உள்ள ஒரு அரண்மனையின் அந்தப்புரத்தை விட்டு வெளியேறி, ஆறு வருடங்கள் நீடிக்கப் போகும் அந்த பயணத்தைத் தொடங்கினார்கள். அப்போது குல்பதன் பேகமுக்கு வயது 53.
ஆனால் இந்தக் காவிய பயணத்தின் விவரங்கள் வரலாற்றுப் பதிவுகளில் இல்லை. ஒருவேளை பெண் பயணிகளின் இந்த யாத்திரையை விரும்பாத முகலாய அரசின் ‘ஆண்’ வரலாற்றாசிரியர்களின் புறக்கணிப்பு காரணமாக இந்த விவரங்கள் விடுபட்டிருக்கலாம் என்று தற்கால வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
குல்பதானின் மெக்கா யாத்திரை வீரம், கருணை மற்றும் கிளர்ச்சி ஆகிய பண்புகளுக்காக அறியப்படுகிறது என எழுத்தாளர் மற்றும் வரலாற்றாசிரியர் ரூபி லால் தனது, ‘நாடோடி இளவரசி: குல்பதனின் மிகச்சிறந்த சாகசங்கள்’ (Vagabond Princess: The Great Adventures of Gulbadan) என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
இந்தப் புத்தகம் சமீபத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்த மாத இறுதியில் உலகமெங்கும் வெளியிடப்படுகிறது.
