மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உள்ளிட்ட நால்வரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், கடவத்தை, கிரில்லவெல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் ஹெல்மெட், கத்தி, சட்டை மற்றும் ரக்வான பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ஆகியவற்றை மீகொட பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளை மறைப்பதற்கு உதவிய ஹோட்டல் உரிமையாளரையும் சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர்களை தலைமறைவாகச் செல்ல உதவிய மற்றுமொரு நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (12) மீகொட பொருளாதார மத்திய நிலையத்தின் கடையொன்றில் கொள்ளையடிக்க மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து காசாளர் பெண்ணொருவரை காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். மற்றைய பணப்பெட்டியை ஏற்கனவே கொள்ளையடித்த நிலையில், கடையிலிருந்த இரண்டு பணப்பெட்டிகளில் ஒன்றின் சாவியைப் பெறும் முயற்சியில் இரண்டு துப்பாக்கிதாரிகள் பெண் காசாளரின் வயிற்றில் மூன்று முறை சுட்டுக் கொன்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவரை சுட்டுக் கொன்ற பின்னர், துப்பாக்கிதாரிகள் திருடிய பணத்துடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 39 மற்றும் 44 வயதுடைய எம்புல்கம மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர். மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
