புற்றுநோய் உண்டாக்கும் நிறமிகள் எந்தெந்தப் உணவுப் பொருள்களில் சேர்க்கப்படுகின்றன?
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் ரோடமைன் பி எனும் நச்சுப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ரோடமைன் பி பஞ்சுமிட்டாயில் மட்டும் தான் கலக்கப்படுகிறதா?
இந்த கேள்விக்கு பதில் ‘நிச்சயமாக இல்லை.’
ரோடமைன் பி எனும் நிறமி, பஞ்சு மிட்டாய் மட்டுமல்லாமல் சர்க்கரைவள்ளி கிழங்கின் மேற்பரப்பில் பூசப்படும். சில சமயங்களில் கேழ்வரகிலும் சிவப்பு நிறம் கிடைப்பதற்காக சேர்க்கப்படும்.
ரோடமைன் பி மனித உட்கொள்ளுதலுக்கு தகுதி அற்றது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் உணவுப் பொருட்களில் ரோடமைன் பி பயன்பாட்டை தடை செய்துள்ளது. இந்த தடையை மீறி உணவு தயாரிப்பதில் பதப்படுத்துவதில் விற்பனை செய்வதில் ரோடமைன் பி பயன்படுத்துவோர் உணவு பாதுகாப்பு சட்டம் 2006-ன் படி தண்டிக்கப்படுவர்.
