Doctor Vikatan: எனக்கு சிறுவயதில் புருவங்கள் (Eyebrows) அடர்த்தியாக, கருமையாக இருக்கும். இப்போது 40 வயதில் புருவங்கள் மெலிந்துகொண்டே வருகின்றன. புருவ முடிகள் நரைக்கவும் தொடங்கிவிட்டன. இந்தப் பிரச்னைக்குக் காரணம் எனன்… சரிசெய்ய முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.
உங்களுக்கு இருக்கும் இந்த `ஸ்கேன்ட்டி ஐப்ரோஸ்’ (scanty eyebrows) பிரச்னை நிறைய பேருக்கு இன்று இருக்கிறது. தலைமுடியோ, புருவங்களில் உள்ள முடியோ… இல்லாததை வளரச் செய்வது என்பது சாத்தியமில்லாதது. மரபியல் ரீதியாக உங்களுக்கு அமைந்ததுதான் இருக்கும். மிகப் பிரபலமான நடிகைகளுக்கேகூட புருவங்கள் மிகத் திருத்தமாகவோ, அடர்த்தியாகவோ இருக்காது. அதுவே, உங்கள் பக்கத்துவீட்டுப் பெண்ணுக்கு அழகிய, அடர்த்தியான புருவங்கள் இருக்கலாம்.
எனவே, அது மரபணுக்கள் சம்பந்தப்பட்ட விஷயம். ஆகவே, இருப்பதைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிகள் எடுக்கலாம். புருவங்களில் உள்ள முடிகள் உதிர முக்கிய காரணம், பொடுகு பிரச்னை.
அதாவது, கண்ணுக்குத் தெரியும்வகையான பொடுகு. தலைவாரும்போது உங்கள் உடையில் உதிரும்படி வெளிப்படையாகத் தெரியும் இந்தப் பொடுகு, புருவங்களில் உள்ள முடியை மட்டுமன்றி, கண் இமைகளில் உள்ள முடியையும் உதிரச் செய்யலாம். பொடுகானது, முடியின் வேர்களை அடைத்துக்கொள்ளும். அதனால் முடிக்குத் தேவையான ஆக்ஸிஜன் தடைப்படும்.
பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டியதும், பவுடரை எடுத்து உச்சந்தலையிலும் புருவங்கள் உட்பட முகம் முழுவதும் தடவி விடுவார்கள். அதுவும் சருமத் துவாரங்களை அடைத்துக் கொள்ளும். 5 மாதக் குழந்தைக்கு நீங்கள் செய்கிற விஷயம், அதன் 20 வயதில் வழுக்கை விழ பெரிய காரணமாக அமையும். அதேபோல, பெரியவர்களும் முகத்துக்கு லூஸ் பவுடர் தடவுவார்கள். அதுவும் சருமத் துவாரங்களை அடைத்துக் கொள்ளும். இதைத் தொடர்ந்து செய்யும்போது முடிக்கு ரத்த ஓட்டமும் தடைப்பட்டு, உதிரத் தொடங்கும்.
புருவங்களை அடர்த்தியாகக் காட்ட மேக்கப் செய்வார்கள் சிலர். அது தவறில்லை, ஆனால், இரவில் அதை முறையாக நீக்கிவிட்டுத் தூங்கச் செல்ல வேண்டும். புருவங்கள் மெலியும் இந்தப் பிரச்னைக்கு (scanty eyebrows) எளிய சிகிச்சை ஒன்று சொல்கிறேன்.
விளக்கெண்ணெய், கேரட் சீட் ஆயில், வெஜிடபுள் கிளிசரின் மூன்றையும் வாங்கிக் கொள்ளவும். 50 மில்லி விளக்கெண்ணெயில் (castor oil) 300 சொட்டு கேரட் சீட் ஆயில் (carrot seed oil) சேர்க்கவும். 5 மில்லி கிளிசரின் (glycerin) சேர்க்கவும். கலந்து ஒருநாள் முழுவதும் அப்படியே வைத்திருக்கவும்.
புருவங்களை வெந்நீரில் நனைத்த துணியால் துடைத்துவிடவும். பிறகு, புருவங்களுக்கான சின்ன சீப்பு வைத்து எதிர்த்திசையில் வாரிவிடவும். பிறகு, தயார் செய்துவைத்துள்ள எண்ணெய்க் கலவையில் விரலைத் தொட்டு, புருவங்கள் வளரும் திசையிலேயே மீண்டும் மீண்டும் தடவவும். அரை மணி நேரம் அப்படியே விடலாம்.
ஐப்ரோ பென்சிலின் முனைப்பகுதியை நீங்கள் தயாரித்து வைத்துள்ள எண்ணெய்க் கலவையில் மூழ்கும்படி போட்டு வையுங்கள். இரவு தூங்கும் முன் மீண்டும் புருவங்களை எதிர்த்திசையில் வாரிவிட்டு, எண்ணெயில் ஊறிய ஐப்ரோ பென்சிலால் புருவங்களின் மேல் ஏழெட்டு முறை வரைந்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை கழுவிவிடுங்கள்.