வாஷிங்டன்: பூமியை விட இரண்டு மடங்கு பெரிய கோள் ஒன்றை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. மேற்பரப்பு முழுவதும் கடலைக் கொண்ட இந்த கோளில், சுமார் 4 ஆயிரம் டிகிரி அளவுக்கு கொதிக்கும் வெப்ப நிலையில், கடல் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் யூகித்துள்ளனர்.
பூமியை போல வேறு கிரகங்களிலும் மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதா? என்ற ஆய்வில் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்கள். கற்பனைக்கும் எட்டாத பெரிய பால்வெளி மண்டலத்தில் எண்ணிலடங்கா கோள்கள் உள்ளன. எனவே, பூமியைப் போலவே கண்டிப்பாக வேறு கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ வாய்ப்பு இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
இதனால், சூரிய மண்டலத்தில் உள்ள செவ்வாய், புதன் உள்ளிட்ட கோள்களிலும் தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது. பூமியைப் போன்ற ஒரு கிரகத்திற்கான தேடல் என்பது சூரியக் குடும்பம், பால்வீதி கேலக்ஸிகளையம் தாண்டிவிட்டது. குறிப்பாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் இத்தகைய ஆய்வில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி: இதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவில் இருந்து 5 ராக்கெட்டுகள் உதவியுடன் இந்த ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டது. இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மிக நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த தொலைநோக்கி விண்வெளி ஆய்வில் பல்வேறு திருப்புமுனைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புதிய தொலை தூர கோள் ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
பூமியை போல இரண்டு மடங்கு பெரியது: TOI-270 d என்று அறியப்படும் இந்த கோள் முழுவதும் ஆழமான கடல் பரப்புகளை உள்ளடக்கியதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். 70 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள இந்த புதிய கோள், அளவில் பூமியை போல இரண்டு மடங்கு பெரியது ஆகும். இந்த கிரகத்தின் வளிமண்டல தோற்றத்தை கவனிக்கும் போது நீராவி நிறைந்து இருக்கிறதாம். மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவையும் உள்ளன.
இந்த வாதத்தை ஒரு தரப்பு விஞ்ஞானிகள் ஏற்கவும் இல்லை. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், இந்த கோள் அதன் முழு மேற்பரப்பிலும் பரந்த கடலைக் கொண்டிருக்கக்கூடும் என்று கூறுகின்றனர். ஏனெனில் வளிமண்டலத்தில் அமோனியா இல்லாமல் இருப்பதால் அவை கடலால் உறிஞ்சப்பட்டு இருக்கும் என்பது இந்த விஞ்ஞானிகளின் வாதமாக உள்ளது. 4 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பம்: ஹைட்ரஜன் நிறைந்த வளிமண்டலத்தை கொண்டு இருக்கக் கூடிய இந்த கோள், முழுவதும் கடலைக் கொண்டு இருப்பதாக பேராசிரியர் நிக்கு மதுசூதன் தெரிவித்தார். அதேநேரத்தில் கனடாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகையில், “TOI-270 d கோளில் அதிக வெப்ப நிலையில், தண்ணீர் இருக்கலாம். இதன் வெப்பம் 4 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடும். அடர்த்தியான வளிமண்டலத்துடன் இந்த கிரகம் ஒரு பாறைகளை மேற்பரப்பில் கொண்டு இருக்கும் என்பது இவர்களின் வாதம்.
கடல் மட்டும் தான் இருக்கும்: வேதியியலின் அடிப்படை விதிகளின் படி, ஹைட்ரஜன் வளம் அதிகம் உள்ள வளிமண்டலத்தில் கண்டிப்பாக அமோனியா இருக்க வேண்டும். ஆனால், இந்த கோளில் அமோனியா இல்லை. எனவே, அங்கு கண்டிப்பாக கடல் தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். கோளில் கடல் இருப்பதால், அமோனியாவை அது தன்வசம் உறிஞ்சு வைத்துக்கொள்ளும் என்பதே இவர்கள் கருத்து.