சுபாஷ் சந்திர போஸ்
பதவி,பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஆபாசமான மற்றும் மோசமான உள்ளடக்கங்களை கொண்ட படங்கள், தொடர்களை வெளியிடுதல், பெண்களை தவறான முறையில் சித்தரித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியாவில் செயல்பட்டு வந்த 18 ஓடிடி தளங்களை தடை செய்துள்ளது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை.
இதோடு சேர்த்து 19 இணையதளங்கள், 10 செயலிகள் மற்றும் 57 சமூக வலைதள கணக்குகளையும் தடை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே ஆபாச படங்களை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய தடை பேசுபொருளாகியுள்ளது. இதில் எந்தெந்த தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன, இதன் தாக்கம் என்ன, இவை ஏன் தடை செய்யப்பட்டன என்பன உள்ளிட்ட தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
எந்தெந்த ஓடிடி தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன?
சமீப காலமாகவே மக்கள் ஆபாச படங்களை பார்க்காமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதில் குழந்தைகள் குறித்த ஆபாச படங்களை பார்ப்பவர்கள், பகிர்பவர்கள், பதிவிறக்கம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதும் அடக்கம்.
ஆனால், இன்று ஆபாச படங்களுக்கு பிரத்யேக தளங்கள் என்பதை தாண்டி, பல ஓடிடி தளங்களே ஆபாச உள்ளடக்கங்கள் கொண்ட படங்களை வெளியிட்டு வருகின்றன. எந்தளவிற்கான வயது வந்தோருக்கான உள்ளடக்கம் காட்டப்படலாம் என்ற விதியையும் தாண்டி, சில தளங்கள் முழுமையாக ஆபாச மற்றும் பெண்களை மோசமாக சித்தரிக்கும் விதமான படங்களை வெளியிட்டு வருகின்றன.
அப்படி செயல்பட்டு வந்த ஓடிடி தளங்களான Dreams Films, Voovi, Yessma, Yessma, Tri Flicks, X Prime, Neon X VIP, Besharam, Hunters, Rabbit, Xtramood, Nuefliks, MoodX, Mojflix, Hot Shots VIP, Fugi, Chikooflix, Prime Play ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
இதோடு 19 இணையதளங்கள், 10 செயலிகள் (7 கூகுள் பிளே ஸ்டோர், 3 ஆப்பிள் ஆப் ஸ்டோர்) மற்றும் 57 சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இதில் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட ஓடிடி தளத்தின் செயலி கூகுள் பிளேஸ்டோரில் 1 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இரண்டு செயலிகள் 50 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதற்காக இவை தடை செய்யப்பட்டுள்ளன?
தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 த்தின் பிரிவு 67 மற்றும் 2008ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிரிவு 67a அடிப்படையில் தற்போது இந்த ஓடிடி தளங்கள் மற்றும் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டப்பிரிவுகளின் படி, ஆபாச உள்ளடக்கங்களை கொண்ட படங்களை வெளியிடுதல், மோசமான வகையில் ஒருவரை சித்தரித்தல் ஆகிய செயல்களில் ஈடுபடும் எந்த ஒரு டிஜிட்டல் தளத்தையும் அரசு தடை செய்யலாம்.
மேலும், மேற்கூறப்பட்டுள்ள தளங்களில் பெண்களை ஒரு கருவியாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அவர்களை தவறாக சித்தரித்துள்ளனர். இது பெண்களின் அநாகரீகமான பிரதிநிதித்துவம் (தடை) சட்டம், 1986 – இன் பிரிவு 4-இன்படி தண்டனைக்குரிய குற்றம் என்கிறார் சைபர் சட்ட நிபுணர் மற்றும் சைபர் கிரைம் வழக்கறிஞரான கார்த்திகேயன்.என்.
எனவே இந்த சட்டங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட ஓடிடி தளங்கள் மற்றும் செயலிகள், சமூக வலைதள பக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் அவர்.
அங்கீகரிக்கப்பட்ட செயலிகளுக்கும், இவற்றுக்கும் என்ன வித்யாசம்?
பொதுவாக திரைப்படத்துறைக்கு இருப்பது போல் இந்தியாவில் ஓடிடி தளங்கள் மற்றும் செயலிகளில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களை தணிக்கை செய்யும் அமைப்புகள் இல்லை.
இதனால், சமீப காலமாகவே இந்தத் தளங்களில் வெளியாகும் படங்களில் அதிகமாக தவறான வார்த்தைகளை பயன்படுத்துதல் மற்றும் ஆபாச காட்சிகளை ஒளிபரப்புதல் போன்றவை இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.
அதில் சிறிய செயலிகள் தொடங்கி பெரிய அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் வரை விதிவிலக்கே இல்லை. ஆனால், நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற பெரிய ஓடிடி தளங்களில் ஒளிபரப்பப்படும் ஆபாச உள்ளடக்கம் கொண்ட காட்சிகளுக்கும், தற்போது தடை செய்யப்பட்டுள்ள ஓடிடி தளங்களுக்கும் என்ன வித்யாசம்? ஏன் குறிப்பிட்ட செயலிகள் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளன?
இதற்கு பதிலளிக்கும் கார்த்திகேயன், “அங்கீகரிக்கப்பட்ட ஓடிடி தளங்களில் முதன்மை நோக்கமே படங்கள் மற்றும் தொடர்களை வெளியிடுவதுதான். அவற்றை தணிக்கை செய்ய அந்தந்த நாடுகளில் அமைப்புகள் உள்ளன. மேலும், இவற்றில் ஒரு சதவீதம் மட்டுமே ஆபாச உள்ளடக்கம் கொண்ட காட்சிகள் இருந்தாலும், அது ஒரு குறிப்பிட்ட திரைப்படம் அல்லது தொடரின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கிறது” என்கிறார்.
ஆனால், “தடை செய்யப்பட்டுள்ள ஓடிடி தளங்கள் மற்றும் செயலிகளின் முதன்மை நோக்கமே ஆபாச படங்களை வெளியிட்டு அதன் மூலம் பணமீட்டுவது. இவற்றில் ஒவ்வொரு வயதுக்கு ஏற்றவாறு தனித்தனியாகவும் ஆபாச படங்கள் உள்ளன. அதற்கு தனித்தனியாக பணம் வசூலிக்கப்படுகிறது. இது மேற்கூறிய சட்டப்பிரிவுகளின் படி தண்டனைக்குரிய குற்றம்” என்று விளக்கமளிக்கிறார் அவர்.
அதே போல் கார்த்திகேயன் கூற்றுப்படி, “ஒரு படம் அல்லது தொடரில் இவ்வளவுதான் ஆபாச உள்ளடக்கம் கொண்ட காட்சிகள் வைக்கப்படலாம் என்ற எந்த வரையறைகள் கிடையாது. மேற்கூறிய சட்டங்களின்படி எல்லைகள் உண்டே தவிர, இவற்றை கட்டுப்படுத்தும் அளவுகோல் எதுவும் கிடையாது”
தடை என்பது என்ன?
இதுவரை ஏராளமான செயலிகள் மற்றும் இணையதளங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. சமீப ஆண்டுகளில் கூட பாதுகாப்பு காரணங்களுக்காக நூற்றுக்கணக்கான சீன செயலிகள் தடை செய்யப்பட்டன.
ஆனால், என்னதான் மத்திய அரசு தடை என்று அறிவித்தாலும் ஏதோ ஒரு வழியில் இந்த தளங்கள் மக்கள் பயன்பாட்டில் தான் இருக்கிறது. அதற்கு உதாரணமாக சமீபத்தில் தடை செய்யப்பட்டு மீண்டும் தடை விலக்கப்பட்ட பப்ஜி(PUBG) விளையாட்டை குறிப்பிடலாம்.
அந்த விளையாட்டு தடை செய்யப்பட்ட போதிலும் கூட இளைஞர்கள் பலரும் விபிஎன் வழியாக அதை தொடர்ந்து விளையாடியதை பார்க்க முடிந்தது. அந்த வகையில் மத்திய அரசு குறிப்பிடும் இந்த தடையால் என்ன பயன் என்ற கேள்வி எழுகிறது.
இதற்கு பதிலளித்த ப்ராம்ப்ட் இன்ஃபோடெக் சிஇஓ மற்றும் சைபர் கிரைம் ஆய்வாளருமான சங்கர்ராஜ் சுப்ரமணியன், “மத்திய அரசு இது போன்ற ஓடிடி தளங்கள் மற்றும் செயலிகளை தடை செய்வதால் அதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறையும். மேலும் இது போன்ற படங்களை வெளியிடும் மற்ற இணையதளங்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை” என்கிறார்.
ஆனால், “இன்றைக்கு கடல் போல வளர்ந்துள்ள இணைய உலகில் முழுமையாக இதை கட்டுப்படுத்த முடியாது. காரணம் இங்கு தடை செய்தாலும் விபிஎன்(VPN), பிராக்சி(Proxy) வழியாக தடை செய்யப்பட்ட செயலிகளை மக்கள் பயன்படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் குறைந்தபட்சம் பயனாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவாவது அடிக்கடி இது போன்ற செயலிகள் மற்றும் இணையதளங்களை முடக்குவது நல்லது” என்றும் கூறுகிறார் அவர்.
விபிஎன்(VPN), பிராக்சி(Proxy) என்பது என்ன?
பொதுவாக உங்கள் வீட்டில் ஒரு நெட்ஒர்க் நிறுவனத்தின் இணைப்பு இருக்கிறது என்றால், அதை பயன்படுத்தி நீங்கள் இணையத்தில் ஏதாவது ஒரு தளத்திற்குள் நுழைய நினைக்கும்போது அந்த தளம் ஆபத்தானது என்றால் நாம் பயன்படுத்தும் நிறுவனத்தின் நெட்ஒர்க் அதற்குள் செல்ல அனுமதிக்காது. நமது தரவுகளும் கூட அந்த நிறுவனத்தின் சர்வரில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கும்.
ஆனால், சங்கர்ராஜ் சுப்பிரமணியன் கூற்றுப்படி, “விபிஎன்(VPN), பிராக்சி(Proxy) போன்ற தனிப்பட்ட நெட்ஒர்க் வழித்தடங்கள் வழியாக நாம் இணையத்தை பயன்படுத்தும் போது இது போன்ற எந்த பாதுகாப்பும் இருக்காது. ஆபத்து நிறைந்த செயலி, இணையதளமாக இருந்தாலும் கூட அதன் மூலம் உள்ளே நுழைந்து விடுவோம். அப்படி நுழையும் போது உங்களது தரவுகள் வேறு ஏதோ நாட்டில் இருக்கும் ஏதோ ஒரு நிறுவனத்தின் சர்வரில் சேமிக்கப்பட்டு கொண்டிருக்கும்”
இதனால், யார் வேண்டுமானாலும் உங்களை கண்காணிக்கவோ அல்லது உங்களது தரவுகளை கையாளவோ முடியும். பெரும்பாலான நேரங்களில் இது ஆபத்தில் முடியும் வாய்ப்பே இருப்பதாக தெரிவிக்கிறார் அவர்.
இதைத்தாண்டி கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்தும் பாதுகாப்பான விபிஎன் இணைப்புகளும் இருப்பதாக குறிப்பிடுகிறார் சங்கர்ராஜ் சுப்பிரமணியன்.
எப்படி இந்த செயலிகள் மக்களை சென்றடைகிறது?
இந்தியா மற்றும் உலக நாடுகளில் பல அங்கீகரிக்கப்பட்ட பிரபலமான ஓடிடி தளங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானவையாக நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்டவற்றை கூறலாம். நெட்ப்ளிக்ஸ் தளத்தில் மட்டும் இந்தியாவில் 65 லட்சம் சந்தாதாரர்களும், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் 2 கோடி சந்தாதாரர்களும், டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் 5 கோடி சந்தாதாரர்களும் இருப்பதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.
அதற்கு காரணம், இந்த நிறுவனங்கள் தொடர் விளம்பரங்கள் மற்றும் சலுகைகள் மூலமாக மக்களை சென்றடைகின்றன. ஆனால், தற்போது தடை செய்யப்பட்டுள்ள செயலிகள் மற்றும் ஓடிடி தளங்களின் விளம்பரத்தையும் பொதுவெளியில் உங்களால் பார்த்திருக்க முடியாது. ஆனால். அவை சமூக வலைதங்களில் தீவிரமாக செயல்பட்டவை.
இந்நிலையில் முன்னணி தளங்களுக்கு இணையாக இவையும் கூட 1 கோடி முறைக்கும் மேலாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. எந்த விளம்பரமும் இல்லாமல் எப்படி இவை மக்களை சென்றடைகின்றன?
இதற்கு சங்கர்ராஜ் சுப்பிரமணியம் கொடுக்கும் பதில் கொஞ்சம் அதிர்ச்சியை தருகிறது.
“வாய்வழியாகவே இந்த செயலிகள் அதிக மக்களை சென்றடைகிறது. ஒருவர் மற்றொருவருக்கு பரிந்துரைப்பதன் வழியாக இது அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. அதைத் தாண்டி மார்க்கெட்டிங் மெசேஜ் போல குறிப்பிட்ட நபர்களை இலக்கு வைத்து அவர்களுக்கு இந்த செயலிகள் மற்றும் ஓடிடி தளங்களுக்கான லிங்க் அனுப்பப்படுகிறது. அதன் வழியாகவும் இவை கணிசமான மக்களை சென்றடைகிறது.”
குறிப்பாக ஆபாச படங்கள் சார்ந்த வீடியோக்கள், படங்களை இணையத்தின் எந்த வழியிலும் பார்க்கும் நபர்களை குறிவைத்தே இந்த மெசேஜ் அனுப்பப்படுவதாக தெரிவிக்கிறார் அவர்.
மேலும் தடை செய்யப்பட்ட இந்த செயலிகளை வேறு வழிகளில் பயன்படுத்துவதன் மூலம் உங்களது தரவுகள் தவறானவர்களின் கைகளில் சிக்கிக்கொள்ளும் அபாயம் அதிகம் எனவும் எச்சரிக்கிறார்.
எப்படி நீங்கள் பாதிக்கப்படலாம்?
பொதுவாக ஆபாச படங்கள் குறித்த அதிகம் ஆர்வம் கொண்டவர்களையே இலக்காக கொண்டு இது சார்ந்த மோசடிகள் நடக்கிறது. அதை தற்போதைய இணைய உலகின் தேடுதல் தரவுகளை கொண்டே மோசடி கும்பல் கண்டுபிடித்து விடுகிறது.
அந்த வகையில் அனுப்பப்படும் மோசடி மெசேஜில் உள்ள லிங்கை ஒருவர் கிளிக் செய்துவிட்டால் அவரது மொபைல் அல்லது எலக்ட்ரானிக் டிவைஸின் ஒட்டுமொத்த கட்டுப்பாடுமே ஹேக்கரின் கைகளுக்கு சென்று விடும்.
இதன் மூலம் பணம் திருடுவதில் தொடங்கி உங்களது அந்தரங்கத்தை திருடுவது வரை அவர்களால் என்ன வேண்டுமெனில் செய்யமுடியும் என்கிறார் சங்கர்ராஜ்.
அதே போல், அடிக்கடி அவர்களுக்கு ஆபாச வீடியோ கால், சேட்டிங் போன்ற அழைப்புகள் வருவது. அதன் வழியாக அவர்களை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களும் அதிகம் நடப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
முழுமையான பாதுகாப்பு சாத்தியமா?
இணைய உலகில் பாதுகாப்பு, ரகசியம் என்றெல்லாம் எதுவும் இல்லை. அப்படி இருப்பதாக நினைத்து நாமே பல செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்கிறோம். நமது அந்தரங்க விஷயங்களை அதில் சேமித்து வைத்துக் கொள்கிறோம். ஆனால், அது அனைத்துமே உண்மை கிடையாது என்கிறார் சங்கர்ராஜ் சுப்பிரமணியன்.
மேலும், இணையம் நாளுக்கு நாள் பரிணாம வளர்ச்சி அடைந்துக்கொண்டே இருப்பதால் அதற்கேற்ற சட்ட திட்டங்கள் போதுமானதாக இல்லை. ஆனால், அரசும் ஒவ்வொரு நாளும் புதுப்புது விதிகளை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கிறது. அதன் ஒரு பகுதிதான் இந்த தளங்களை தடை செய்வதும் என்று குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “இணைய உலகில் இது போன்ற ஆபாச இணையதளங்களை முழுமையாக ஒழிக்கவே முடியாது. இன்றைய நிலையில் அசுர வளர்ச்சி அடைந்துள்ள இவற்றை அனைத்து நாடுகளும் சேர்ந்து முடிவு செய்தாலும் கூட ஒழிக்க சாத்தியமில்லை. ஆனால், குறைக்க முடியும்” என்கிறார்.
அதற்கு, இவற்றை இனம்கண்டு தடை செய்யுதல் முக்கியமான முன்னெடுப்பு என்று கூறுகிறார் அவர். மேலும் மத்திய கிழக்கு நாடுகளை போல ஆபாச படங்களை பார்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனை என்பதை பின்பற்றினால் கூட அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையலாம் என்றும் பரிந்துரைக்கிறார்.
‘தனி தணிக்கை வேண்டும்’
ஒரு ஆபாச ஓடிடி தளத்தை லட்சக்கணக்கான பேர் பார்த்த பின்புதான் அதன் மீது நடவடிக்கை எடுக்கிறோம். அதற்கு பதிலாக ஓடிடி தளங்கள் மற்றும் செயலிகளை கட்டுப்படுத்தும் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டால் வருமுன் காக்கலாம் என்கிறார் கார்த்திகேயன்.
இந்த தணிக்கை அமைப்பு மூலம் இந்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் செயலிகள் மற்றும் ஓடிடி தளங்களுக்கு மட்டுமே கூகுள் போன்ற தளங்கள் இந்தியாவிற்குள் அனுமதி தர வேண்டும் என்ற விதியை உருவாக்கினால் மட்டுமே எதிர்கால பிரச்னைகளை குறைக்க முடியும் என்கிறார் அவர்.
BBC