“நாங்கள் இதற்கு எந்தவிதமான ரசாயானங்களும் சேர்ப்பதில்லை. ஆரம்பத்தில் மும்பையில் பால் வாங்கி நெய் தயாரித்து பார்த்தோம். ஆனால்,எதிர்பார்த்த சுவை கிடைக்கவில்லை. நெய் சுவை மற்றும் தரத்தில் எந்த வித சமரசமும் செய்வதில்லை என்று முடிவு செய்தோம்…”
பொதுவாக சொந்த தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு எப்போதும் ஒருவித தயக்கம் இருக்கும். வேலைக்குச் சென்றால் மாத சம்பளம் கிடைக்கும். ஆனால் தொழிலில் நிரந்தர வருமானம் கிடைக்காது என்பதாலும், முதலீடு அதிகம் தேவை என்பதாலும் தொழில் தொடங்க அதிகமானோர் தயக்கம் காட்டுவர். சிலர் 50 வயதில் தொழில் தொடங்கி சாதித்ததுண்டு. அது போன்று மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில் வசிக்கும் கமல்ஜித் கவுர்(50) என்ற பெண் கொரோனா காலத்தில் தொழில் தொடங்கி சாதித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த கமல்ஜித் கவுர் அங்கு இயற்கையாக கிடைக்கும் பால் மற்றும் பாலில் இருந்து வீடுகளில் எடுக்கப்படும் நெய், பாலாடைக்கட்டி போன்றவற்றை சாப்பிட்டு வளர்ந்தவர். மும்பை வந்த பிறகு கிராமத்தில் கிடைத்த சுவையான பால் பொருள்கள் கிடைக்கவில்லை.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கமல்ஜித் கவுர் அதிலிருந்து மீண்டு வந்த பிறகு வீட்டிலேயே சொந்தமாக நெய் (Ghee ) தயாரிக்க முடிவு செய்தார். இதற்காக உள்ளூரில் பால் வாங்கி நெய் தயாரித்தார்.
அதோடு கர்ப்பிணி பெண்கள் குளிர்காலத்தில் சாப்பிடக்கூடிய பஞ்சிரிஸ் எனப்படும் ஒரு வகை இனிப்பை தயாரித்து தனது மகனின் நண்பர்களுக்கு கொடுத்தார். அதற்கு நண்பர்களின் மனைவிகளிடம் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதில் ஒருவர் இதனை தொழிலாக செய்யலாம் என்று ஆலோசனை கூறினார். அதனை தொடர்ந்து கிம்ஸ் கிச்சன் என்ற நிறுவனத்தை கமல்ஜித் தனது 50வது வயதில் மும்ப்ராவில் தொடங்கினார். இது குறித்து கமல்ஜித் கூறுகையில்,” கிராமத்தில் நான் சின்ன வயதில் பால், மோர், நெய் மற்றும் காய்கறிகள் சாப்பிட்டு வளர்ந்தேன். இதனால் சலதோஷம் என்பது வருடத்தில் எப்போதாவது ஒரு முறை வரும். ஆனால் திருமணமாகி மும்பை வந்த பிறகு நிலைமை மாறிவிட்டது. அடிக்கடி சலதோஷம் பிடிக்க ஆரம்பித்தது.
2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிம்மு கிச்சன் என்ற பெயரில் சிறிய நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தோம். இதன் மூலம் செயற்கையாக எதையும் சேர்க்காமல் இயற்கையான முறையில் நெய் தயாரிப்பில் கவனம் செலுத்தினேன்.
எனது கிராமத்தில் எப்படி கையால் நெய் தயாரிக்கப்படுகிறதோ அதே முறையில் நெய் தயாரித்தோம். பாரம்பரிய பிலோனா முறையில் நெய் தயாரிக்கிறோம். அதாவது பாலை சுடவைத்து அதனை குளிரவைத்து அதில் சிறிதளவு தயிர் சேர்த்து தயிராக மாற்றி அதனை கடைந்து வெண்ணெய் எடுத்து அதனை சுடவைத்து நெய் தயாரிக்கிறோம். நாங்கள் இதற்கு எந்தவிதமான ரசாயானங்களும் சேர்ப்பதில்லை. ஆரம்பத்தில் மும்பையில் பால் வாங்கி நெய் தயாரித்து பார்த்தோம்.
ஆனால்,எதிர்பார்த்த சுவை கிடைக்கவில்லை. நெய் சுவை மற்றும் தரத்தில் எந்த வித சமரசமும் செய்வதில்லை என்று முடிவு செய்தோம். இதற்காக லூதியானாவில் இருந்து பால் கொண்டு வருவது குறித்து பரிசீலித்தோம். ஆனால் அது சாத்தியம் இல்லை என்பதால் லூதியானா கிராமத்திலேயே சொந்தமாக நெய் தயாரிக்கும் ஆலையை உருவாக்கி அங்கு நெய் தயாரித்து மும்பைக்கு கொண்டு வந்து பேக்கிங் செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தோம்.
நெய் தயாரிக்கும் ஆலையை உருவாக்க 8 லட்சம் ரூபாய் செலவு செய்தோம். 220 மில்லி, 500 மில்லி மற்றும் ஒரு மில்லி லிட்டர் என்ற அளவில் மூன்று பாட்டில்களில் நெய் பேக்கிங் செய்து விற்பனை செய்கிறோம். ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.20 லட்சம் அளவுக்கு வருமானம் வருகிறது. எருமை மாட்டு பாலில் இருந்து நெய் தயாரிக்கிறோம். இதற்காக கூடுதலாக எருமை மாடுகளும் வாங்கி இருக்கிறோம்.
ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பாட்டில்கள் விற்பனையாகிறது. 220 மில்லி ரூ.399க்கு விற்பனை செய்கிறோம். இது வரை இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்து வந்தோம். இப்போது போலந்து போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்”என்றார்.
கமல்ஜித் சிங்கிற்கு அவரது மகன் ஹர்பிரீத் சிங் தேவையான உதவிகளை செய்து கவனித்து கொள்கிறார். வருமானத்தில் ஒரு சதவீதத்தை சேவைகளுக்காக செலவிடுகின்றனர்.