சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் Rosemary Water… கூந்தல் வளர்ச்சிக்கு உதவுமா?

ரோஸ்மேரியை ஆயிலாகப் பயன்படுத்தும்பட்சத்தில் அது உள்ளே இறங்கி, முடியின் வேர்க்கால்களைப் பாதுகாத்து, ஊட்டமளிக்கும்.

மீப காலமாக சோஷியல் மீடியாவில் ரோஸ்மேரி வாட்டர் (Rosemary Water) என ஒன்று வைரலாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அந்தத் தண்ணீரை கூந்தலில் ஸ்பிரே செய்துகொண்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்… இது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.

எசென்ஷியல் ஆயில் (Essential Oil) வகைகளில் சில ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தவை. அப்படி ஒன்று ரோஸ்மேரி ஆயில். லாவண்டர் ஆயில், டீ ட்ரீ ஆயில், ரோஸ்மேரி ஆயில் போன்றவை எல்லோருமே பயமின்றி பயன்படுத்தக்கூடிய தன்மை கொண்ட அற்புதமான ஆயில்கள்.

ரோஸ்மேரி ஆயில், ரோஸ்மேரி ஹைட்ராசால் (Hydrosol) என இரண்டு இருக்கின்றன. ரோஸ்மேரி ஆயில் என்பது ரோஸ்மேரி இலைகளிலிருந்து எடுக்கப்படும் அரோமா எண்ணெய். அதுவே ரோஸ்மேரி ஹைட்ராசால் என்பது ரோஸ்மேரி இலைகளை டிஸ்டில்டு வாட்டரில் கொதிக்க வைத்துத் தயாரிக்கப்படுவது. ரோஸ்மேரி இலைகளைக் கொதிக்க வைத்து, அதன் நீராவியை ஒரு கண்ணாடிக் குடுவையில் சேகரித்து ஹைட்ராசால் தயாரிக்கும் டெக்னிக் ஒன்று உண்டு.

அரோமா ஆயில் எனப்படும் எசென்ஷியல் ஆயிலின் சிறப்பு என்னவென்றால், அவற்றை எந்தப் பிரச்னைக்காக சருமத்தில் அல்லது கூந்தலில் தடவுகிறோமா, 2 முதல் 20 நொடிகளுக்குள் சருமத்தினுள் ஊடுருவி வேலை செய்வதுதான். உங்களுடைய முடியின் வேர்கள், சருமத்தின் இரண்டாவது லேயரான டெர்மிஸில் (Dermis) இருக்கும். நீங்கள் சருமத்துக்குப் பயன் படுத்தும் எந்தப் பொருளும், டெர்மிஸ் லேயரை சென்றடைந்தால் தான் அது வேலை செய்யும். மற்றபடி நாம் உபயோகிக்கும் ஹைட்ராசால், முடிக்கான பேக் என எல்லாமே `ஷாஃப்ட்’ (shaft) எனப்படும் முடியின் வெளிப்புறத்தைக் கண்டிஷன் செய்து ஊட்டமளிக்கும்.

ரோஸ்மேரியை ஆயிலாகப் பயன்படுத்தும்பட்சத்தில் அது உள்ளே இறங்கி, முடியின் வேர்க்கால்களைப் பாதுகாத்து, ஊட்டமளிக்கும். முடியை வளரச் செய்ய பிரதானமாக இரண்டு விஷயங்கள் அவசியம். ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ரத்தத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் இரண்டும் சிறப்பாக இருந்தாலே முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். மற்றபடி பொடுகுள்ள கூந்தல், முடி மெலிவது, நீண்ட நாள் மருத்துவ சிகிச்சையின் காரணமாக முடி உதிர்வது போன்றவற்றுக்கு ரோஸ்மேரி உள்ளிட்ட எசென்ஷியல் ஆயில்கள் மட்டுமே உதவும். ஹைட்ராசால் வாட்டர் மேலோட்டமாக மட்டுமே வேலை செய்யும்.

Exit mobile version