160 பயணிகளுடன் பயணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்!

#Newsinfirst #Airplane

சவுதி அரேபியாவின் ஜித்தாவிலிருந்து கேரளாவின் கோழிக்கோடுக்கு 160 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்கும் கியர் மற்றும் டயர் பழுதடைந்ததால் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (18) காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இது குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள கொச்சின் சர்வதேச விமான நிலைய லிமிடெட் நிறுவனம், முழு அவசரகால சூழ்நிலையில் இன்று காலை 09.07 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக கூறியது.

இதனால், விமானத்தில் பயணித்த மற்றும் தரையில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அவசர சேவைகள் முன்கூட்டியே செயல்படுத்தப்பட்டதாகவும் கொச்சின் சர்வதேச விமான நிலைய லிமிடெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 

விமானம் தரையிறங்களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதன் வலது பக்க டயர்கள் இரண்டும் வெடித்து இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், ஜித்தா விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்த மர்மமான பொருளால் விமானத்தின் டயர் சேதமடைந்திருக்கலாம் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

மேலும், விமானம் கொச்சியில் பாதுகாப்பாக தரையிறங்கியது, அனைத்து பயணிகளையும் சாலை வழியாக கோழிக்கோடுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விமான நிறுவனம் கூறியுள்ளது.

Exit mobile version