தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான கடவத்த டிப்போவுக்கு சொந்தமான பேருந்தொன்றில் திடீரென தடையாளி செயலிழந்துள்ளது.
இந்நிலையில், குறித்த பேருந்தின் சாரதி பிரதான வீதியில் காட்டுப் பகுதியில் பள்ளமான இடத்தில் பேருந்தினை ஒரு மண் மேட்டில் மோதவைத்து பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தியமையால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது என கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் உள்ள கினிகத்தேனை கடவல வளைவு பகுதியில் இன்று (26) அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மகேஷ் சுதர்சன் வயது (49) என்ற சாரதியே பேருந்து குறுகிய வளைந்த மலைப்பாதையில் பயணித்தபோது பேருந்தில் தடையாளி கோளாறு ஏற்பட்டுள்ளதை உடனடியாக உணர்ந்து அதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு மண் மேட்டில் மோத வைத்து பேருந்தினை நிறுத்தி பயணிகள் பேருந்தில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை தவிர்த்து 80 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
எனினும் பேருந்திற்கு மட்டும் சிறிய சேதம் ஏற்பட்டாலும், பயணிகள் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் சாரதி பேருந்தை கட்டுப்படுத்த தவறியிருந்தால் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பெரும் விபத்தை ஏற்படுத்தியிருக்கும் என பேருந்தில் இருந்த பயணிகள் தெரிவித்தனர்.
கினிகத்தேன பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
