வீட்டு வேலைகள் மற்றும் பயிற்சியற்ற துறைகளில் பணியாற்றுவதற்கு பெண்களை வௌிநாடுகளுக்கு அனுப்பும் நடைமுறைகளை இன்று (11) முதல் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வீசா மூலம் வெளிநாடுகளுக்கு தொழில்களுக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள், பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகியமை தெரியவந்ததையடுத்தே, பணியகம்
இந்நடவடிக்கையை எடுக்கவுள்ளது. ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு வேலைக்குச் சென்றவர்களே இந்நிர்க்கதிக்கு ஆளாகியுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இப்பணெ்கள் வேலையின்றி உள்ளனர்.எந்தவொரு நிறுவனமோ அல்லது நபரோ இவர்களை பொறுப்பேற்க முன்வரவில்லை. இதனால், இவர்கள் தவறாக நடத்தப்படுவதாக அங்குள்ள இலங்கை தூதரகங்கள் தெரிவித்துள்ளன.
இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் நிலையும் உருவாகியுள்ளது.
இதேவேளை, ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாகக் கூறி பண மோசடி செய்த 570 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இவ்வாறான 182 முறைப்பாடுகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மோசடியான முறையில் பெற்ற 2,83,83,000 ரூபாவை முறைப்பாட்டாளர்களுக்கு மீளப் பெற்றுக் கொடுக்க பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடியான வெளிநாட்டு வேலை வாய்ப்பு சம்பவங்கள் தொடர்பில் பணியகத்துக்கு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் 17 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டு 43 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் அறிவித்துள்ளது.
