மாகாண மேல் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யும் வசதி வேண்டும்

அபாயகரமான போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கான பிணை விண்ணப்பங்களை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாக மட்டுமன்றி மாகாண மேல் நீதிமன்றத்தின் ஊடாகவும் விண்ணப்பிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அது தொடர்பில் தெரிவித்த அவர், அவ்வாறில்லையென்றால் அது நீதியை மறுப்பதாகவும் அதிகாரப் பரவலாக்கத்துக்கு எதிரானதாகவும் அமையும் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற நீதித்துறை தொடர்பான திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அபாயகரமான போதைப் பொருள் பயன்பாடு தொடர்பானவர்களுக்கு வழங்கப்படும் பிணை விண்ணப்பம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினாலேயே வழங்கப்படுகின்றது.

நீதியை அனுகி அதனை பெற்றுக்கொள்வதற்கான முறையே இது.எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றங்கள் கொழும்பிலேயே செயற்படுகின்றன.

மேல்நீதிமன்றம் மாகாணங்கள்தோறும் செயற்படுகின்றன. அதனூடாக இதற்கான வழிவகைகளை மேற்கொள்ளாவிட்டால் அது நீதியை மறுப்பதாக அமைவதுடன் அதிகாரப் பரவலாக்கத்திற்கு எதிரானதாகவும் அமையும்.அதேவேளை சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு துன்பங்கள் இருக்கக் கூடாது. தண்டனை என்பது தீங்கானதாக இருந்தாலும் அதில் பல வகைகள் உள்ளன.

அரசாங்க தரப்பில் உள்ளவர்கள் சிறைச்சாலைகளில் ஆடம்பர சொகுசுமாடிகளை அமைக்க எதிர்பார்க்கின்றனர். அப்போதுதான் அவர்கள் அங்கு சென்றாலும் சொகுசாக வாழலாம் என்று நினைக்கின்றனர். சிறைச்சாலையில் அனைவரும் சமமாக வழிநடத்தப்பட வேண்டும். சிறைக் கைதிகளுக்கிடையே வகுப்புவாதத்தை உருவாக்கிவிடக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version