பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் உள்ள தொலைதூரத் தீவான டியாகோ கார்சியாவில் சிக்கித் தவிக்கும் மூன்று இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.
2021 ஒக்டோபரில் தொடங்கி தொடர்ச்சியாக ஐந்து படகுகளில் 200க்கும் மேற்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் டியாகோ கார்சியாவை வந்தடைந்தனர்.
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட விமானங்களில் டசின் கணக்கானவர்கள் இலங்கைக்குத் திரும்பினர். மற்றவர்கள் தங்கள் படகுகளுக்குத் திரும்பி, இந்தியப் பெருங்கடலின் குறுக்கே பிரான்சுக்குச் சொந்தமான ரீயூனியன் தீவுக்குச் சென்றனர்.
The New Humanitarian க்கு மின்னஞ்சல் அனுப்பிய பதிலில் மருத்துவ நடவடிக்கை பற்றிய செய்தியை உறுதிப்படுத்திய பிரித்தானிய வெளிவிவகார , பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம், “புலம்பெயர்ந்தோர்” சிகிச்சை முடிந்த பின்னர் பிரித்தானிய இந்தியப் பெருங்கடலுக்குத் திரும்புவார்கள் என தெரிவித்துள்ளது.
அப்போதைய பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஏப்ரல் மாதம் ருவாண்டா அரசாங்கத்துடன் செய்துகொண்ட கடல் கடந்த செயலாக்க ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்துவதற்கு பிரித்தானிய அதிகாரிகள் முற்படலாம் என்ற அச்சத்தை இந்த மருத்துவ இடமாற்றங்கள் ஏற்படுத்துகின்றன.
ருவாண்டா ஒப்பந்தத்தின் கீழ் பிரிட்டனின் பிரதான நிலப்பரப்பில் இருந்து நாடுகடத்தப்படுவது – 2022 இல் பிரான்சில் இருந்து படகுகளில் வந்தவர்களின் எண்ணிக்கை 40,000 ஐத் தாண்டிய பின்னர் , 2021 இல் இருந்து 10,000 க்கும் அதிகமாக – பிரித்தானிய நீதிமன்றங்களின் சவால்களுக்கு மத்தியில் பல மாதங்களாக நிறுத்தப்பட்டது.
100 க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் டியாகோ கார்சியாவில் தங்கியுள்ளனர். அவர்கள் பாதுகாப்பற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுவதைத் தடுக்கும் சர்வதேச சட்டக் கோட்பாட்டை மறுபரிசீலனை செய்யாமல் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட முடியுமா என்பதை அதிகாரிகள் தீர்மானிக்க காத்திருக்கின்றனர்.
புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் வருகை தொடர்பாக இங்கிலாந்து அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவ இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 14 அன்று, உள்துறைச் செயலாளர் சுயெல்லா பிராவர்மேன், ஆங்கிலக் கால்வாயில் ரோந்துப் படகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரெஞ்சு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
