இலங்கையில் 2.26 மில்லியன் சிறுவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவை

"Flags at UN building, NYC, please see also my other images of New York in my lightbox:"

இலங்கையிலுள்ள 2.26 மில்லியன் சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

யுனிசெப்பின் புதிய அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் 56,000 சிறுவர்கள் மிக மோசமான போஷாக்கின்மை நிலையிலுள்ளதாகவும், அவர்களில் 05 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்கு விரைவான மனிதாபிமான உதவி மற்றும் சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

அத்துடன், நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அந்த எண்ணிக்கை இந்த வருடத்தில் 286 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 4.8 மில்லியன் பிள்ளைகளுக்கு கல்வி கற்றலுக்கான வசதிகள் தேவைப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையால், இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்திலிருந்து எதிர்வரும் வருடத்தின் பெப்ரவரி மாதம் வரையிலான காலத்தில் உணவுப் பாதுகாப்பு மேலும் உக்கிரமடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.2 மில்லியன் மக்கள் உணவு பற்றாக்குறையுடன் காணப்படுவதாகவும், மேலும் 66,000 பேர் உணவு பாதுகாப்பு இல்லாத நிலையிலுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் 05 குடும்பங்களில் 02 குடும்பங்கள் மாதாந்த சம்பளத்தில் 75 வீதத்தை உணவுத் தேவைக்காக செலவிடுகின்றன.

இந்நிலையில் அந்த குடும்பங்களின் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு மிகக்குறைவான நிதியே மீதப்படுகிறது.

பணவீக்கம் காரணமாக பெரும்பாலான குடும்பங்கள், தாம் மீதப்படுத்தி வைத்திருந்த பணத்தை செலவிட்டு முடித்துள்ளன. இத்தகைய குடும்பங்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version