சந்திரனை நோக்கி Artemis-1 ஏவுகணையை வெற்றிகரமாக அனுப்பியது நாசா

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியாக, தனது ஆர்டெமிஸ் – 1 (Artemis-1) எனும் ஏவுகணையை வெற்றிகரமாக விண்வெளிக்கு ஏவியுள்ளது.

சந்திரனுக்கு மனிதனை அனுப்பி 53 ஆண்டுகளுக்கு பின்னர் (1969, ஜூலை 20) மீண்டும் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி நீண்ட காலம் தங்க வைத்து ஆய்வு செய்வதற்காக ஆர்டெமிஸ் எனும் பயணத் திட்டத்தை நாசா முன்னெடுத்துள்ளது. இந்த திட்டம் மூலம் 2025ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே இருமுறை ஆர்டெமிஸ்-1 ஏவுகணையை ஏவும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், இன்று மு.ப. 11:34 மணியளவில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து குறித்த ஏவுகணையை சந்திரனுக்கு ஏவ திட்டமிடப்பட்டது.

வானிலையில் சாதகமான சூழல் இருப்பதால் ரொக்கெட்டை ஏவுவதற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஒருவேளை அதன் ஏவுதளத்தில் சிக்கல் ஏற்பட்டால் நவம்பர் 19 அல்லது 25ஆம் திகதிகளில் அதனை ஏவ மாற்று திகதிகளை நாசா ஒதுக்கியிருந்தது.

ஆரம்பத்தில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு தொடர்பான பிரச்சினை காரணமாக 45 நிமிடங்கள் தாமதமாக ஆர்டெமிஸ் – 1 ஏவுகணையை நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

குறித்த ஏவுகணையை நவம்பர் 14ஆம் திகதி ஏவ திட்டமிட்ட போதிலும் நிகொல் சூறாவளி எச்சரிக்கை காரணமாக அது பிற்போடப்பட்டது. இன்றையதினம் குறித்த ஏவுகணையை ஏவும் முயற்சி இரண்டு தடவைகள் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. அதன் எஞ்சினில் காணப்பட்ட பிரச்சினை அதனைத் தொடர்ந்து அதன் ஐதரசன் எரிபொருள் கசிவு ஆகியன காரணமாக இவ்வாறு 2 தடவைகள் ஏவுகணையை விண்ணில் ஏவுவது இடைநிறுத்தப்பட்ட நிலையில் 3ஆவது முயற்சியாக அது சந்திரனை நோக்கி வெண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

Exit mobile version