- 2022 A/L மாணவர்களுக்கே சலுகை என்கிறது கல்வி அமைச்சு
2023ஆம் ஆண்டு முதல், க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை கட்டாயமாக்கப்படுவதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளரினால் 2022 ஓகஸ்ட் 12ஆம் திகதியிடப்பட்ட ED/09/Ads (SA)/7 எனும் கடிதம் மூலம் 2022 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மாத்திரம் 80% வருகைப் பதிவை உறுதிப்படுத்த வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, குறித்த விலக்களிப்பு 2022 கா.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மாத்திரமே பொருந்தும் என்பதால், 2023 ஆம் ஆண்டு முதல் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை கட்டாயம் என்பதை கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஏற்கனவே இருந்து வந்த குறித்த நடைமுறை, நாட்டில் ஏற்பட்ட போக்குவரத்து மற்றும் எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து, இவ்வாறு தளர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
