நாட்டுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள நான்கு இலட்சம் கிலோ பால்மா மாதக்கணக்கில் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாமல் உள்ளமை தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை தமக்கு பெற்றுத் தருமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேற்படி பால் மாவை துறைமுகத்திலிருந்து விடுவிக்காமை தொடர்பில் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் மற்றும் சுங்கத்திணைக்களம் ஆகியவற்றிடம் இருந்தே அமைச்சர் விரிவான அறிக்கையை கோரியுள்ளார்.
தற்போது சுங்கத்திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள மேற்படி நான்கு இலட்சம் கிலோ பால் மா பாவனைக்கு உதவாத நிலைக்கு தற்போது மாற்றமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்ட காலத்தில் அதை துறைமுகத்திலிருந்து விடிவிக்காமை காரணமாகவே அது பழுதடைந்துள்ளதாகவும் பால் மா வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மேற்படி சுங்கத்திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள பால்மாவை விடுவிக்காமல் நாட்டில் மீண்டும் பால்மா தட்டுப்பாடு ஒன்றை ஏற்படுத்தி மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதற்கான சூழ்ச்சியான வேலைத் திட்டமே இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் மேற்படி சம்பவம் தொடர்பில் விரைவாக தமக்கு விரிவான அறிக்கையைப் பெற்றுத் தருமாறு நிதி இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
