யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மானிப்பாய் – ஆலடி சந்திப்பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அவர்களில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றவர் தலைகவசம் அணிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தம்மீதான குற்றத்தை ஏற்றுக் கொண்ட குறித்த நபர் தமக்கான தண்டனையை எழுத்துமூலம் தருமாறு பொலிஸாரிடம் கோரியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸாருக்கும் குறித்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அங்கு சென்ற இராணுவத்தினர் அவரை தாக்கியதாக தெரியவந்துள்ளது. பின்னர் அங்கு சென்ற விசேட அதிரடி படையினர் அவரை கைது செய்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குறித்த நபர் மதுபோதையில் இருந்ததாக தெரிவித்தார். அந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவரை மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
