சுற்றுலா வீசாவில் மனித விற்பனைக்கு இரையாகும் இலங்கைப் பெண்கள்

போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை என்பவற்றை போல மனித வியாபாரமும் விரைவாக வளர்ந்து அதிக வருமானத்தைப் பெற்றுத்தரும் குற்றச்செயலாக காணப்படுகின்றது. இதில் மக்கள் பண்டங்களைப் போல விற்கப்படுகின்றனர். அதிகளவில் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்களே மனித வியாபாரத்தால் பாதிக்கப்படுகின்றனர். அதுவும் பாலியல் தேவைகளுக்காக அப்பாவிப் பெண்கள் விற்கப்படுவது பிரதானமாக இடம்பெற்றுவருகின்றது. இலங்கை மனித வியாபாரம் இடம்பெறும் ஆரம்ப இடமாக காணப்படுவதுடன் மனித வியாபாரத்துக்காக ஆட்களை பெற்றுக்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கையிலிருந்து ஓமான், துபாய் போன்ற நாடுகளுக்கு பெண்கள் சுற்றுலா வீசாவில் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமான், துபாய் போன்ற நாடுகளில் இலங்கை பெண்களுக்கு அதிக கிராக்கி நிலவுவதாக தெரிவிக்கின்றனர். இதனாலேயே இலங்கை பெண்களை பண்டங்கள் போல அனுப்புவதற்கு மனிதவிற்பனையாளர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். அதுவும் சட்டச் சிக்கல்களை தவிர்ப்பதற்காக அண்மைக்காலத்தில் சுற்றுலா வீசாவில் மத்தியகிழக்கு நாடுகளுக்கு செல்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை இவர்கள் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இலங்கையிலுள்ள மனித விற்பனையாளர்கள் தொழிலை பெற்றுத்தருவதாக கூறி ஒமான், துபாய் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா வீசாவிலேயே அதிகளவில் பெண்களை அழைத்துச் செல்கின்றனர். அதாவது தொழிலுக்காக மத்தியகிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்பவர்கள் கட்டாயம் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தில் கட்டணம் செலுத்தி தம்மை பதிவுசெய்யவேண்டும். இரண்டாவது வெளிநாடு செல்லும் போது வயதெல்லை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். இதற்கு மேலதிகமாக குடும்பப் பின்னணி அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் 5 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் இல்லாமை மற்றும் 5 வயதிலும் கூடிய பிள்ளைகள் இருப்பின் அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக வீட்டில் வயதுவந்த ஒருவர் இருத்தல், என்பன கவனத்தில் கொள்ளப்படும். மேலும் தொழில் வீசாவில் பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்பவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படுகின்ற பயிற்சிநெறியை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். இப்பயிற்சிகளின் போது வெளிநாட்டில் முகம் கொடுக்கவேண்டிய கலாசார, காலநிலை, மொழி மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கான ஆலோசனைகள், தீர்வுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்படும். அதன்பின்னரே தொழில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதனால் ஏஜன்சிகளும் கூட சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டும் என்ற நடைமுறை காணப்படுகின்றது. எனவே, இங்கிருந்து செல்பவர்களுக்கு ஒரளவேனும் சட்டப்பாதுகாப்பு கிடைக்கும். ஆனால் இது மனித விற்பனையாளர்களுக்கு சுதந்திரமாக தமது தொழிலை செய்வதற்கு தடையாக இருப்பதாலும் எதிர்காலத்தில் தமக்கு சட்டச்சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதாலும் சுற்றுலா வீசாவில் பெண்களை அனுப்புவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஓமான், துபாய் போன்ற நாடுகளுக்கு பெண்கள் பாலியல் தொழிலுக்கு விற்படுகின்ற சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதன் விளைவாகவே துரிதமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இதன் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் ஊடாக மனிதக் கடத்தல், வர்த்தகம் மற்றும் சமுத்திரவியல் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டு, கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி இப்பிரிவின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் மனித கடத்தல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காக தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் மனித விற்பனை பரவலாக நடைபெறும் விதம் தொடர்பில் சர்வதேச ரீதியில் பயிற்சிகளை பெற்ற அதிகாரிகளை கொண்ட குழுவினரே இப்பிரிவில் கடமையாற்றுகின்றனர். எனவே இலங்கை பெண்கள் ஓமான் நாட்டுக்கு பாலியல் தொழிலாளிகளாக விற்கப்படுகின்றமை தொடர்பில் தகவல்களை ஆராய்ந்து கொண்டிருக்கும் போதே ஓமான் இலங்கை தூதரகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு இல்லங்களில் சுற்றுலா வீசாவில் சென்று நிர்க்கதியான பெண்கள் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்தே ஓமானில் நடைபெறும் பாரிய மனித விற்பனையின் சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்காக ஐவர் அடங்கிய குழுவொன்றை ஓமானுக்கு அனுப்புவதற்கு ஆட்கடத்தல், வர்த்தகம் மற்றும் சமுத்திரவியல் குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் பரிசோதகர் சமரகோன் பண்டார தீர்மானித்தார். அதற்கமையவே அக்குழு கடந்த ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி ஓமான் மஸ்கட் நகரிலுள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்துக்கு சென்றனர்.

அங்கு பாதுகாப்பு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 45 பெண்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்விசாரணைகளின் போதே 45 பேரும் சட்டவிரோதமாக மனித விற்பனையாளர்களினால் சுற்றுலா வீசாவில் அழைத்து வரப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதில் 18 பேர் மனித விற்பனையாளர்களால் துபாய் ஊடாக ஓமானுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சுற்றுலா வீசாவில், துபாய் வரை அழைத்துவரப்பட்டு அபுதாபியில் சில நாட்கள் தங்கவைக்கப்பட்டு ஓமானுக்கு குறுக்குவழியாக எல்லைகள் ஊடாக வீசா இன்றி அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் 26பேர் நேரடியாக இலங்கை விமானத்தில் சுற்றுலா வீசாவில் ஓமானுக்கு அழைத்துவரப்பட்டவர்கள். இதில் ஒருவர் மட்டுமே சுற்றுலா வீசாவில் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து ஓமானுக்கு வந்தவர் என விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. இதில் சுற்றுலா வீசாவில் மனித விற்பனையாளர்களினால் துபாய் ஊடாக ஓமானுக்கு கொண்டுவரப்பட்ட 18 பெண்களும் பண்டாரநாயக்க விமான நிலையத்திலுள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் காரியாலயத்தில் பதிவு செய்யப்பட்டே வந்ததாக பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள பெண்கள் தெரிவிக்கின்றனர்.

“சுற்றுலா வீசாவில் ஓமானுக்கு அழைத்துவரப்படுகின்றோம் என்று எங்களுக்குத் தெரியாது. பாஸ்போர்ட், டிக்கட் எங்களிடம் இருக்கவில்லை. அது தொழில் வீசாவா?, சுற்றுலா வீசாவா? எனவும் தெரியாது. ஏஜன்சிக்காரர்கள் சொல்லியவர்களை நாங்கள் விமானநிலையத்துக்கு வந்தே சந்தித்தோம். அதன்பின்னரே எங்களை பதிவுசெய்தனர்” என பாதுகாப்பு இல்லங்களில் தங்கியிருந்த பெண்களில் ஒருவர் அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

இவ்விசாரணைகளின் போது மனித வியாபாரத்துக்காக அதிகளவில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இரையாக்கியுள்ளமை தெரியவந்துள்ளது. அதுவும் பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஓமானில் பாலியல் தொழிலாளிகளாக இலங்கை பெண்களை மாற்றுவதற்கு அந்த நாட்டில் அதிகமான ஏஜன்சிகள் இயங்கிவருகின்றமையும் தெரியவந்துள்ளது. இதில் இலங்கையர்களே அதிகளவில் வேலைசெய்கின்றனர். அவர்களே இங்கிருந்து செல்லும் பெண்களை பாலியல் தொழிலாளிகளாக மாற்றி விற்பனை செய்கின்றனர். ஓமான் நாட்டு எஜன்மானர்களிடம் இங்கிருந்து செல்லும் பெண்களை 20, 30 என வரிசையில் நிற்கவைத்து விரும்பிய ஒருவரை தெரிவுசெய்யும் படி ஓமான் நாட்டிலுள்ள எஜமானர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவார்கள். இலங்கை நாணயப்பெறுமதியின் படி இலங்கை பெண்ணொருவர் 15 முதல் 20 இலட்சத்துக்கு விற்பனைசெய்யப்படுவதாக தெரியவருகின்றது. அதுவும் ஓமான் நாட்டிலுள்ள எஜன்மானர்கள் வீட்டுப் பணிப் பெண் என்ற போர்வையிலேயே இந்தப் பெண்களை பெற்றுக்கொள்கின்றனர். ஒரு பெண்னை எஜமானரிடம் 15 அல்லது 20 இலட்சத்துக்கு விற்பனை செய்ததன் பின்னர் அங்குள்ள ஏஜன்சிக்காரர் இதுதொடர்பில் இலங்கையிலுள்ள முகவருக்கு அறிவிப்பார். அதன்பின்னர் இரண்டு, மூன்று இலட்சத்தை ஓமானிலுள்ள ஏஜன்சிக்காரர் வைத்துகொண்டு மிகுதிப் பணத்தை இலங்கையிலுள்ள முகவருக்கு அனுப்பிவைப்பார். அந்த பணத்தில் ஒருசிறுதொகையை அடிமட்டத்தில் வேலைசெய்யும் பெண்களை அழைத்துவரும் தரகர்களுக்கு வழங்குவதுடன் மிகுதிப் பணத்தை அந்த முகவர் தன்வசம் வைத்துக்கொள்வார். இலங்கையிலுள்ள ஏஜன்சி முகவரே தூரப்பிரதேசங்களிலிருந்து பெண்களை அழைத்துவருவதற்கான போக்குவரத்து செலவு, விமான டிக்கட், பாஸ்போட் செய்வதற்கான செலவுகள், தங்குமிட செலவுகள் என்பவற்றை பார்த்துக்கொள்வார்.

தங்குமிடங்களில் வைத்தும் பெண்கள் ஏஜன்சிக்காரர்கள், தரகர்களினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு. அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய 6 ஏஜன்சிக்காரர்களை மனித கடத்தல், வர்த்தகம் மற்றும் சமுத்திரவியல் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அதில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்காக தற்சமயம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சில இடங்களில் ஓமானுக்கு சுற்றுலா வீசாவில் சென்ற பெண்களை அந்த நாட்டைச் சேர்ந்த எஜமானர்கள் தொழில் வீசா வழங்கி வீட்டு வேலைகளுக்கு அமர்த்தியுள்ளனர். எனினும் அதிக வேலை, மொழி, கலாசாரம், உபகரணங்களை கையாளத் தெரியாமை போன்ற காரணங்களினாலும் தாம் தொழில் செய்யும் வீடுகளிலிருந்து தப்பி பாதுகாப்பு இல்லங்களில் அவர்கள் தஞ்சமடைந்துள்ளதாகவும் மனிதக் கடத்தல், வர்த்தகம் மற்றும் சமுத்திரவியல் குற்றவியல் விசாரணைப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அதுமட்டுமின்றி ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் மீதும் இச்சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்படுகின்றது. ஓமானில் வீடுகளிலிருந்து பல்வேறு துன்புறுத்தல் காரணமாக தப்பிவரும் பெண்களை அதே ஏஜன்சிகளிடம் திருப்பி ஒப்படைக்கும் நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டுள்ளதாகவும் இவர் பல பெண்களுடன் பாலியல் தொடர்பு கொண்டிருந்ததாகவும் அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இவர் பல ஏஜன்சிகளுடன் நெருங்கிய தொடர்பினை பேணிவந்துள்ளார். சுற்றுலா வீசாவில் மனித விற்பனையாளர்களால் அழைத்துவரப்படும் பெண்களை பல்வேறு இடங்களில் அலையவிட்டு பாலியல் தொழிலாளியாக மாற்றுவதற்கு இவரும் உடந்தையாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஓமான் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கமைய வீசா இன்றி நாட்டுக்குள் தங்கியிருந்தால் 500 தினார் அதாவது இலங்கை நாணயப் பெறுமதிபடி 5 இலட்சம் ரூபா தண்டப் பணமாகச் செலுத்த வேண்டும். இதுதவிர இலங்கைக்கான விமான டிக்கட்டுக்கும் பணம் தேவைப்படும். எனினும் இந்த பணத்தை செலுத்தமுடியாத நிலையிலேயே பாதுகாப்பு இல்லங்களை நாடி அப்பாவிப் பெண்கள் செல்கின்றனர். ஆனால் அங்கிருந்த அதிகாரி அந்த பெண்களிடம் எப்படியாவது பணத்தை தேடிகொள்ளுங்கள் இல்லையென்றால் இலங்கைக்கு செல்லமுடியாது என அவர்களை அலைக்கழித்து விபசாரத்தில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திப்பதாகவும் மனிதக் கடத்தல், வர்த்தகம் மற்றும் சமுத்திரகுற்றவியல் விசாரணைப் பிரிவினருக்கு பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள பெண்களில் இருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து ஓமானிலுள்ள இலங்கை தூதரக அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்சமயம் பாதுகாப்பு இல்லங்களில் தங்கிவைக்கப்பட்டுள்ள பெண்களை இலங்கைக்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மனிதக் கடத்தல், வர்த்தகம் மற்றும் சமுத்திரகுற்றவியல் விசாரணைப் பிரிவினர் மிகவும் சூட்சுமமான முறையில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இவ்வாறு சென்றவர்களில் அதிகமானவர்கள் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதுடன், சிலருக்கு 5 வயதுக்கும் குறைவான வயதில் பிள்ளைகள் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

Exit mobile version