அரசை கவிழ்க்க சதி செய்த சந்தேகம் தொடர்பில் ஜேர்மனி எங்கும் நடத்தப்பட்ட சுற்றுவளைப்புத் தேடுதல்களில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவிர வலதுசாரிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் பாராளுமன்றம் மற்றும் அரச கட்டடத்தை ஆக்கிரமித்து அதிகாரத்தை கைப்பற்ற சதி செய்ததாக ஜேர்மனியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தம்மை எட்டாவது ஹெயின்ரிச் இளவரசர் என்று அழைத்துக் கொள்ளும் ஒருவரே இந்த சதியில் ஈடுபட்டிருப்பதோடு மூளையாக செயற்பட்டுள்ளார். 11 ஜேர்மனி மாநிலங்களில் இருந்து கைது செய்யப்பட்டவர்களில் இவரும் இருப்பதாக மத்திய அரச வழங்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கடும்போக்கு ரிச்பெர்கர் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் இந்த சதியில் இடம்பெற்றுள்ளனர். வன்முறை தாக்குதல்கள் மற்றும் இனவெறி சதிக் கோட்பாடுகள் தொடர்பில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஜேர்மனி பொலிஸாரின் கண்காணிப்பில் நீண்ட காலமாக இருந்து வருபவர்களாவர். இவர்கள் தற்கால ஜேர்மனி அரசை அங்கீகரிக்க மறுக்கின்றனர்.
இந்தக் குழுவில் ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 50 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ஜேர்மனி அரசை கவிழ்த்து இரண்டாவது ரிச் பேரரசு என்று அழைக்கப்படும் 1871ஆம் ஆண்டின் வடிவிலான அரசொன்றை அமைக்கும் சதியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டின் பெரும்பகுதியை உள்ளடக்கும் வகையில் 130 இடங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான அதிகாரிகள் இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
