பெங்களூர்: பிரிட்டன் பிரதமராகும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பற்றி அவரது மாமனாரும், இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான நாராயண மூர்த்தி பேசியுள்ளார். மேலும் பிரிட்டன் பிரதமராகும் மருமகனுக்கு அவர் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு துவகத்தில் இருந்தே பிரிட்டன் அரசியலில் குழப்பமான சூழல் ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கை மீறி பார்ட்டி நடத்தியது, ஊழல், முறைகேடு புகாரில் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் சிக்கினார்.
இதையடுத்து அவரது அமைச்சரவையில் இருந்தவர்கள் ராஜினாமா செய்ய துவங்கினர். நிதி அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் உள்ளிட்டவர்கள் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து வேறு வழியின்றி போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். அதன்பிறகு புதிய பிரதமருக்கான தேர்தல் நடைபெற்றது. பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இறுதி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் களத்தில் இருந்தனர். இதில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்று பிரதமரானார். அவரது அமைச்சரவை தாக்கல் செய்த பட்ஜெட் காரணமாக பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. இதையடுத்து லிஸ் ட்ரஸ் தனது பதவியை வெறும் 45 நாட்களில் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து வரும் 28 ம் தேதிக்குள் புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன், மற்றும் பென்னி மோர்டான்ட் ஆகியோர் போட்டியிடலாம் என கூறப்பட்டது. இதில் போரிஸ் ஜான்சன், பென்னி மோர்டான்ட் ஆகியோர் விலகினர். தனித்து களமிறங்கிய பிரிட்டன் ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக தேர்வாவது நேற்று உறுதியானது. இவர் விரைவில் பிரிட்டன் பிரதமராக முறைப்படி பதவியேற்க உள்ளார்.
பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்க உள்ள ரிஷி சுனக்கிற்கு வயது 42 தான். இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு மே 12ல் பிரிட்டன் சவுதாம்ப்டன் நகரில் பிறந்தார். இவரது தந்தை பெயர் யாஷ்வீர். தாய் பெயர் உஷா. ரிஷி சுனக்கின் தந்தை வழி தாத்தாவும் பாட்டியும் இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் 1960ல் கென்யாவுக்கு குடிபெயர்ந்த நிலையில் அங்கு ரிஷி சுனக்கின் தந்தை யாஷ்வீர் தேசிய சுகாதார மையத்தில் பணிபுரிந்தார். அவரது தாய் மருந்தகம் நடத்தி வந்தார்.
ரிஷி சுனக் இந்து மதத்தை சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் அக்சதா மூர்த்தி. இவர் கர்நாடகத்தை சேர்ந்த இன்போசிஸ் இணை நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள். ரிஷி சுனக், அக்சதா மூர்த்தி ஆகியோர் கல்லூரியில் படித்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 2 பேருக்கும் 2009ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கிருஷ்ணா, அனோஷ்கா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக் பற்றி அவரது மாமனாரும், இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான நாராயண மூர்த்தி மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். அதோடு பிரிட்டன் மக்கள் நலனுக்காக அவர் பாடுபடுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுபற்றி நாராயணமூர்த்தி கூறுகையில், ‛‛ரிஷிக்கு வாழ்த்துக்கள். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவருக்கு வெற்றிக்கிடைக்க வாழ்த்துகிறேன். பிரிட்டன் மக்களுக்காக அவர் தன்னால் முடிந்தவற்றை சிறப்பாக செய்வார் என நம்புகிறேன்” என்றார்.
முன்னதாக 2001 முதல் 2004ல் கோல்டுமேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியில் ஆய்வாளராக பணியாற்றிய அவர், இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி நடத்தியத கடாமரான் வென்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக சில ஆண்டுகள் இருந்தார். அதன்பிறகு அரசியலில் நுழைந்தார். அதன்பிறகு அரசியலில் நுழைந்தார். சில ஆண்டுகள் கன்சர்வேட்டிவ் கட்சிக்காக தீவிரமாக கட்சிப் பணியாற்றினார். 2014-ல் வடக்கு யார்க்ஷையர் ரிச்மாண்டு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். அதன்பிறகு பல்வேறு துறை அமைச்சராக இருந்த அவர் 2019ல் அதேதொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார். போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தார். கொரோனா கால பொருளாதார பிரச்சனையை திறம்பட கையாண்டு புகழின் உச்சிக்கு சென்ற இவர் தற்போது பிரதமராக தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
