‘நவ ஜனதா பெரமுன’ அமைப்பு கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ‘கோ ஹோம் சீனா’ என சீனாவிற்கு எதிராக கருத்து தெரிவித்ததை கண்டித்தும் சீனாவிற்கு ஆதரவு தெரிவித்தும் ‘நவ ஜனதா பெரமுன’ அமைப்பினர் நேற்று கொழும்பிலுள்ள சீன தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனா எமது மக்களின் நண்பன் அல்ல ராஜபக்சக்களின் நண்பன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நவ ஜனதா பெரமுன அமைப்பினர் தாம் சீனாவை ஆதரிப்பதாகவும் சாணக்கியனின் கருத்தை எதிர்ப்பதாகவும் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்தனர்.

சாணக்கியன் எம்பி கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், கொழும்புத் துறைமுக நகரத்தையும் தனதாக்கியுள்ளது. இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சீனா எந்த அபிவிருத்தி முதலீடுகளை மேற்கொண்டுள்ளது? சீனாவின் முதலீடுகளில் இலங்கைக்கு எவ்வித நலனும் கிடைக்கப் பெறவில்லை.

சீனா இலங்கையின் நெருங்கிய நண்பன் என்று குறிப்பிடுகின்றார்கள். அவ்வாறாயின் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இலங்கைக்கு சீனா ஆதரவாகச் செயற்பட வேண்டும். இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமை பேரவையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கும் போது சீனா இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுகின்றது. இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சீனா இலங்கைக்குச் சார்பாகச் செயற்படுகிறது எனக் குறிப்பிடுகிறார்கள்.

இதனைப் பைத்தியக்காரத்தனமான பேச்சு என்று குறிப்பிட வேண்டும். சீனாவில் ஜனநாயகம், மனித உரிமைகள் இல்லை. மதச் சுதந்திரம் இல்லை. இவ்வாறான சூழலையா இலங்கையிலும் ஏற்படுத்த முயற்சிக்கின்றீர்கள்? சீனா இலங்கையின் உண்மையான நட்பு நாடு இல்லை. மஹிந்த ராஜபக்சவினதும், அவரது குடும்பத்தினரதுதும் நண்பராகவே சீனா உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

Exit mobile version