கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களை வலுப்படுத்தும் விதத்தில் யாப்பு திருத்தம்

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நேற்று கலந்துரையாடல்

தேசிய மீனவர் மஹா சம்மேளனத்தின் யாப்பை மறுசீரமைப்பது தொடர்பான கலந்துரையாடல், சம்மேளனத்தின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று(25) நடைபெற்றது.

சுமார் 15 வருடங்களுக்கு மேலாக சம்மேளனத்தின் யாப்பு சீர்திருத்தம் செய்யப்படாததையடுத்து, கால சூழல் மாற்றங்களுக்கமைய கடற்றொழில் சார் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில் யாப்பு சீர்திருத்தம் செய்யப்பட வேண்டுமென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கமைய, மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்ற யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராயும் நோக்கில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது, கிராமிய கடற்றொழில் சங்கங்கள் பெயரளவிலான சங்கங்களாக இன்றி, வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில், காலத்துக்கு காலம் யாப்பு மாத்திரமன்றி, சங்கங்களின் கட்டமைப்புக்களும் புதியவர்கள் உள்வாங்கப்பட்டு மெருகூட்டப்பட வேண்டும் என்ற கருத்து அமைச்சரினால் வெளியிடப்பட்டது.

அத்துடன், மாவட்ட ரீதியான கிராமிய கடற்றொழில் சங்கங்களிடம், யாப்பு சீர்திருத்தம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குமாறு தெரிவித்த அமைச்சர்கள், எதிர்வரும் நவம்பர் 09 ஆம் திகதி, அனைத்து தரப்பினரது ஆலோசனைகளையும் உள்வாங்கி, யாப்பு சீர்திருத்தம் பூரணப்படுத்தப்படுமெனவும் தெரிவித்தனர். இக்கலந்துரையாடலில், கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, மற்றும் கடற்றொழில் திணைக்களம் உட்பட்ட கடற்றொழில்சார் திணைக்களங்களின் பிரதானிகள், கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களின் மாவட்ட ரீதியான பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு, இதன்போது கருத்துக்களை தெரிவித்தனர்.

Exit mobile version