இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு இணையான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை தென்னிந்தியாவில் நடத்த திட்டம் இருந்ததா என்பது குறித்து இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சிற்றூர்ந்து குண்டுவெடிப்பு தொடர்பில் முதற்கட்ட விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு ஆரம்பித்துள்ள நிலையிலேயே, இந்திய ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் முக்கிய சதிகாரர் உள்ளிட்ட சில பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த ஜாஷ்மி முபின் என்பவர் முயன்றமை தமிழக பொலிஸாரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 23 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சிற்றூர்ந்து குண்டுவெடிப்பில் ஜஷ்மி முபின் கொல்லப்பட்டார். சிற்றூர்தி வெடிப்பு சம்பவம் தற்கொலைத் தாக்குதலா அல்லது தற்செயலான எரிவாயு கொள்கலன் வெடிப்பா? என்பது தொடர்பில் தமிழகப் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை உக்கடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஈஸ்வரன் கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்த வெடிவிபத்து இடம்பெற்றுள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 25 வயதுடைய ஜமீஷா முபின் என்பவரின் சடலம் மீட்கப்பட்டது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது ரியாஸ் மற்றும் ஃபரோஸ் இஸ்மாயில் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.