அங்கவீனர்களுக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களின் விலைகள் நூற்றுக்கு 400 வீதமாக அதிகரித்துள்ளதாக பரப்பப்படும் வதந்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும், அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பில் அவர் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையின் அடிப்படையில் அங்கவீனர்களுக்கான உபகரணங்களின் விலைகள் எவ்விதத்திலும் அதிகரிப்பப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் வரி கொள்கை காரணமாக அங்கவீனர்கள் பயன்படுத்தும் உபகரணங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாகவும் சில உபகரணங்கள் 400 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சில தரப்பினர் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளனர். அதன் காரணமாக நபரொருவரின் ஆயுட்காலம் 50 வயதாக குறைவடையலாம் என்றும் மிக மோசமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தத் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை. அரசாங்கமானது அங்கவீனர்கள் உபயோகிக்கும் எந்தவித உபகரணங்கள் மற்றும் பொருட்களுக்கும் வற் வரியையோ அல்லது துறைமுக வரியையோ ஏனைய வரிகளையோ அறவிடுவது கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
