விவசாயத்தில் உதவியதற்காக நெதர்லாந்திற்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

உள்கட்டமைப்பு அபிவிருத்தி, விவசாயம் மற்றும் பல்வேறு துறைகளுக்கு நெதர்லாந்து வழங்கிய உதவிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.

விவசாயம், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, போக்குவரத்து மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் தொழில்நுட்ப அறிவு மற்றும் அதிக முதலீடுகளுக்கு மேலதிக ஆதரவு அளிக்குமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹோர்பாக் இன்று அலரிமாளிகையில் பிரதமரை சந்தித்தார்.

தகவல் தொழிநுட்பம், சுற்றுலா மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் இலங்கைக்கு பரந்த சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், உலகப் பொருளாதார நிலைமை தற்போதைய இக்கட்டான கட்டத்தை தாண்டியவுடன் தனது நாடு மேலும் பல திட்டங்களை மேற்கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

14,000 கிராம சேவகர் பிரிவுகளில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள ‘உணவு வளர்ப்பு’ வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கிய பிரதமர், பெரும் போக நெற் செய்கைக்கு மேலதிகமாக, இதுவரை பயிரிடப்படாத நிலங்களில் பல பயிர்களை பயிரிடுவதன் மூலம், நல்ல விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

தனது நாடு புதுமையான விவசாய தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், நெதர்லாந்தின் நிபுணத்துவத்தை இலங்கைக்கு வழங்க முடியும் எனவும் தூதுவர் ஹோர்பாக் தெரிவித்தார்.

நெதர்லாந்து விஞ்ஞானிகள் புதிய வகை உருளைக்கிழங்கை உருவாக்கியுள்ளனர், நாட்டின் பெரும்பாலான பகுதிகள் கடலுக்கு அருகாமையில் உள்ளதாலும், நிலம் உப்புநீரைக் கொண்டிருப்பதாலும், உருளைக்கிழங்கு செய்கையை தொடங்குவதற்கு உருளைக்கிழங்கு விதைகளை இலங்கைக்கு வழங்க முடியும். கடலுக்கு அருகில் உள்ள பகுதிகளில், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் பயிரிட முடியும்.

காலநிலை மாற்றம், வர்த்தகம், துறைமுக மேம்பாடு மற்றும் கூட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட ஒத்துழைப்புக்கான ஏனைய பகுதிகள் குறித்தும் இதன் போது விவாதிக்கப்பட்டது.

நெதர்லாந்தின் புதிய தூதுவர், இலங்கையில் தனது பதவிக்காலத்தில் இருதரப்பு உறவுகளையும் அபிவிருத்தி ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதே தனது பிரதான பணியாக இருக்கும் என பிரதமரிடம் உறுதியளித்துள்ளார்.

Exit mobile version