பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் இடையில் வருவதைப் போன்ற ‘அகநக’ பாடல் தற்போது வெளியாகி, எல்லோரையும் முணுமுணுக்க வைத்துள்ளது. நாவலில் குந்தவை – வந்தியத்தேவன் இடையிலான காதல் எப்படிப்பட்டது?
ஐந்து பாகங்களை உடைய பொன்னியின் செல்வன் நாவலில் 11வது அத்தியாயத்தில்தான் குந்தவையும் வந்தியத்தேவனும் முதன் முதலில் சந்திக்கிறார்கள். குடந்தை ஜோதிடரின் வீட்டில், குந்தவையும் வானதியும் இருக்கும்போது, திடுமென உள்ளே நுழைகிறான் வந்தியத்தேவன்.
பெண்கள் உள்ளே இருக்கும்போது தான் இப்படி திடுமென நுழைந்ததற்காக வந்தியத்தேவன் மன்னிப்புக் கோரினாலும், குந்தவை ஏதும் சொல்லாமல் சென்றுவிடுகிறாள். இருவருக்குமே, மற்றொருவரைப் பற்றி அந்தத் தருணத்தில் தெரியாது.
இதற்குப் பிறகு குந்தவையின் தோழி வானதியை முதலையிடமிருந்து காப்பாற்ற நினைத்து வாளை உருவும் வந்தியத்தேவன், பிறகு அது பொம்மை முதலை என்பதை அறிந்து வெட்கமடைந்து செல்கிறான். அந்தத் தருணத்திலும் இருவருக்கும் இடையில் அறிமுகம் ஏற்படவில்லை.இதற்குப் பிறகு, ஈசான பட்டரின் உதவியுடன் குந்தவையின் மாளிகைக்குச் சென்று அவளைச் சந்திக்கிறான் வந்தியத்தேவன். அப்போதுதான் தன்னை ஆதித்த கரிகாலனின் ஒற்றன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் வந்தியத்தேவன், அவன் கொடுத்தனுப்பிய ஓலையை குந்தவையிடம் கொடுத்தான்.
