இந்தியாவில் முக்கிய நடிகையாக வலம்வந்த பிரியங்கா சோப்ரா, கடந்த சில ஆண்டுகளாக ஹாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்க பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் அவர், ”பாலிவுட்டில் நடந்த அரசியல்களை என்னால் சமாளிக்க முடியவில்லை என்பதால் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
அவருடைய இந்த வார்த்தைகள் பாலிவுட் சினிமாவில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. இதுகுறித்து பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை கூறிவருகின்றனர். குறிப்பாக நடிகை கங்கனா ரனாவத், “ஒரு சிறந்த நடிகையை பாலிவுட்டிலிருந்து ஒதுக்கி வைத்ததற்கு கரண் ஜோஹர்தான் காரணம்” என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா, 2002ஆம் ஆண்டு தமிழில் எடுக்கப்பட்ட ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். அதனை தொடர்ந்து பாலிவுட்டிற்கு சென்ற அவர், ஹிந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். ஃபேஷன், பர்ஃபி, பாஜிராவ் மஸ்தானி என பல முக்கிய திரைப்படங்களில் நடித்தார். அதேசமயம் அவர் இசைத்துறையிலும் கவனம் செலுத்தி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பின் ஹாலிவுட்டிற்கு சென்ற அவர், பல கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றதுடன், அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை 2018ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டு, அமெரிக்காவிலேயே தொடர்ந்து வசிக்க தொடங்கிவிட்டார்.
