யாழ்ப்பாணத்தில் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக, கூட்டுறவு பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் க.குணரத்தினம் தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் விலைக்குறைப்பு அமுலாகுவதாக, அவர் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படாதென ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து, கூட்டுறவு பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் பாணின் விலையைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் கோதுமை மா, நல்லெண்ணெய் மற்றும் முட்டையின் விலை குறையும் பட்சத்தில், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் முன்னதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே, கூட்டுறவு பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
