ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்தை ஜூலை 01ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய 04 சமூகக் குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள சுமார் 16,000 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
அதற்கமைய பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட 04 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா வீதம் 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது.
வறுமைக் கோட்டின் கீழுள்ள அடையாளப்படுத்தப்பட்டுள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு 8,500 ரூபா வீதம் 2023 ஜூலை 31 முதல் 03 வருடங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
மிகவும் வறுமைக் கோட்டின் கீழுள்ளவர்களாக அடையாளப்படுத் தப்பட்டுள்ள 04 இலட்சம் குடும்பங்களுக்கு 15,000 ரூபா வீதம் 2023 ஜூலை 01 முதல் 03 வருடங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இதேவேளை மாற்றுத்திறனாளிகள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளர்கள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளன.
தற்போதும் உதவி பெறும் 72,000 மாற்றுத்திறனாளிகளுக்கும், 39,150 சிறுநீரக நோயளர்களுக்கும் தலா 5,000 ரூபாவும் ,4,16,667 முதியோருக்கு 2,000 ரூபாவும் ஒரு மாதத்துக்கு வழங்கப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
