வெடுக்குநாறிமலை ஆலயத்தில் வழிபாடு செய்வதை தடுக்க முடியாது

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாட்டுக்கும் பூஜைகளுக்கும் எந்தவொரு அரச அதிகாரிகளும் தடை விதிக்க முடியாது என, வவுனியா மாவட்ட நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டுள்ளது. எனினும், உடைக்கப்பட்ட ஆலய விக்கிரகங்களை இப்பொழுது வைக்க முடியாது என்பதுடன், அடுத்த தவணையில் இது தொடர்பாக ஆராயலாம் எனவும் தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது.

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய சிலை உடைப்பு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போதே, இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதன்போது, ஆலய நிர்வாகம் சார்பில் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகினார்.

இதேவேளை, தொல்லியல் திணைக்களத்தினதும் வனவளத் திணைக்களத்தினதும் பிரதிநிதிகள் நேற்றைய வழக்கில் முன்னிலையாகாமையினால், அவர்கள் அடுத்த வழக்கு விசாரணையில் முன்னிலையாகும்வரை, ஆலயத்துக்கு வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என, பொலிஸார் கேட்டுக்கொண்டனர். தொல்லியல் திணைக்கள பிரதிநிதிகள் நேற்றைய வழக்கு விசாரணையில் முன்னிலையாகமையினால், உடைக்கப்பட்ட சிலையை மீள வைப்பது தொடர்பில் நீதிமன்றம் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அடுத்த வழக்கில் தொல்லியல் திணைக்களத்தினரின் கருத்தை அறிந்து, பொருத்தமான உத்தரவை பிறப்பிப்பதாக, நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version