அமெரிக்க வணிக வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு: 9 பேர் உயிரிழப்பு…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் வணிக வளாகம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

டாலஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அந்த வணிக வளாகத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறைந்தது 7 பேர் காயமடைந்துள்ளனர்.

அலென் நகரில் உள்ள அலென் பிரிமியர் அவுட்லெட்ஸ் கடைத்தொகுதியில் ஆடவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவர் பொலிஸ் அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காயமடைந்த 9 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர் பின்னர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. காயமடைந்தோர் 5 வயதுக்கும் 61 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார்? எதற்காக தாக்குதல் நடத்தினார்? போன்ற விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை. அதேபோன்று பலியானவர்களின் விபரங்களும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் கொல்லப்பட்டவர்களில் சிறுவர்களும் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து நூற்றுக்கும் அதிகமானவர்கள் அந்த வணிக வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் இவ்வாண்டு மட்டும் 198 பெரிய அளவிலான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நேர்ந்துள்ளன. நால்வர் அல்லது அதற்கும் மேற்பட்டோர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவங்கள் பெரிய அளவிலான சம்பவங்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.

துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க அமெரிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெக்சாஸ் மாநிலத்தில் எந்த பயிற்சியும், உரிமமும் இன்றி யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக் கொள்ள சட்டம் அனுமதி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version