நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றின் தீர்க்கமான போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
பிரிஸ்பானில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி குழு 1 புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இதில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் அணிகள் தலா ஐந்து புள்ளிகளை பெற்றபோதும் நிகர ஓட்ட விகிதம் அடிப்படையில் நியூசிலாந்து முதலிடத்தில் இருப்பதோடு அவுஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி நிகர ஓட்ட விகிதத்தை அதிகரித்து தனது கடைசிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தினால் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்ப வீரர்களான ஜோஸ் பட்லர் (73) மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் (52) 81 ஓட்ட இணைப்பாட்டத்தை பகிர்ந்துகொண்டனர்.
இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது.
பதிலெடுத்தாட வந்த நியூசிலாந்து அணிக்கு கிளென் பிலிப் 36 பந்துகளில் 62 ஓட்டங்களை பெற்றபோதும் அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களையே பெற்றது.